செய்திகள்
கோப்பு படம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவத்தொடங்கிய கொரோனா - ஈரானில் வைரஸ் தாக்கி 2 பேர் பலி

Published On 2020-02-20 15:08 GMT   |   Update On 2020-02-20 15:08 GMT
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெஹ்ரான்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. 

இந்த வைரஸ் தாக்கி 2 ஆயிரத்து 124 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 75 ஆயிரத்து 697 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதற்கிடையில், ஹூபேய் மாகாணத்தில் வைரஸ் பரவத்தொடங்கியது முதல் அங்கு வசித்துவந்த வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றுவருகின்றனர். 

அவ்வாறு அழைத்துசெல்லப்படும் நபர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுமார் 60 ஈரான் மாணவர்கள் சொந்த நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். 

மேலும், அவர்கள் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பிற்கு பிறகு வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஈரான் நாட்டில் உள்ள ஹிய்ம் நகரை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஹிய்ம் நகரம் ஆன்மீக தலம் என்பதால் அங்கு சீனா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள் பலர் வருகின்றனர். இதனால், கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வைரஸ் பாதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி 2 பேரும் நேற்று உயிரிழந்தனர். 

இதனால் கொரோனா தாக்கி மத்திய கிழக்கு நாடுகளில் முதல் உயிரிழப்பு சம்பவம் ஈரானில் நடைபெற்றுள்ளது. தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹிய்ம் நகரில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News