செய்திகள்
ரஷ்யா சீனா எல்லை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீனாவுடனான எல்லையை மூடும் ரஷ்யா

Published On 2020-01-30 12:06 GMT   |   Update On 2020-01-30 12:06 GMT
சீனாவில் 170 பேர் உயிரைக் குடித்த கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக சீனாவுடனான எல்லையை மூட உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மாஸ்கோ:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி அனைவரும் அறிந்ததே. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரசினால் இதுவரை அந்நாட்டில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சீனா மட்டுமல்லாது அமெரிக்கா, ஜெர்மனி, கனடா உள்பட 17 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இந்த வைரஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாததால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் சீனாவிற்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக சீனாவுடனான எல்லையை மூட உள்ளதாகவும், சீனர்களுக்கு மின்னணு விசா வழங்குவதை ரத்து செய்ய உள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

‘கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்யா-சீனா எல்லையை விரைவில் மூடும் நடவடிக்கைகள் எடுப்பதற்கான உத்தரவு கையெழுத்தாகியுள்ளது. எங்கள் மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டியுள்ளது’ என ரஷ்யாவின் பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டின் கூறியுள்ளார்.

சீன குடிமக்கள் தூர கிழக்கு மற்றும் மேற்கு ரஷ்யாவின் சில பகுதிகளுக்குள் செல்ல உதவும் மின்னணு விசாக்கள் வழங்குவது நிறுத்தப்படும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரசால் இதுவரை எந்த நபரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அந்நாடு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News