செய்திகள்
போர் விமானம்

ஈராக்கிற்கு ஆயுத விநியோகங்களை நிறுத்தியது அமெரிக்கா

Published On 2020-01-28 05:49 GMT   |   Update On 2020-01-28 05:49 GMT
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில் அந்நாட்டிற்கான அனைத்துவித ஆயுத விநியோகங்களையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாஷிங்டன்:

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 

இதையடுத்து ஈரான் - அமெரிக்கா இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த வாரம் ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. இது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் நேற்று முன்தினம் 3 ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாக்தாத்தில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

இந்நிலையில், ஈராக் நாட்டிற்கு ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

‘ஆயுத விநியோக நிறுத்தம், புதிய எஃப் -16 ரக போர் விமானங்கள் வழங்கலையும் உள்ளடக்கியது. ஈராக்கில் பாதுகாப்பான சூழ்நிலை திரும்பும்போது பென்டகன் மீண்டும் சேவைகளை தொடங்கும்’ என அமெரிக்க விமானப்படை செய்தித் தொடர்பாளர் பிரையன் பிராக்கென்ஸ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இவ்வாண்டின் தொடக்கத்தில், ஈராக் பாராளுமன்றம் அனைத்து வெளிநாட்டு படைகளையும் நாட்டிலிருந்து வெளியேற்ற வாக்களித்ததுடன், சர்வதேச கூட்டணியுடனான ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான குரலையும் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News