செய்திகள்
விமான நிலையம்

இலங்கையிலும் கொரோனோ வைரஸ் - சீனர்களுக்கு விசா ரத்து

Published On 2020-01-28 04:50 GMT   |   Update On 2020-01-28 04:50 GMT
இலங்கையில் கொரோனோ வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து, சீனப் பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்குவதை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
கொழும்பு:

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது.

இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. சீனா முழுவதும் 1300 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா போன்ற பல உலக நாடுகள் கொரோனா வைரஸ் தங்களது நாடுகளுக்குள் பரவுவதை தடுக்க பல்வேறு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில், கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக,  சீனா பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா (விசா-ஆன்-அரைவல்) வழங்குவதை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. 

‘கடந்த ஜனவரி 19ம் தேதி சீனாவில் இருந்து இலங்கை வந்த 40 வயது சீனப் பெண் ஒருவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 25ம் தேதி இலங்கை விமான நிலையத்திலிருந்து அப்பெண் வெளியேறும் போது கண்டறியப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என  இலங்கை சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சுடாத் சுரவீரா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சீனப்பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்கும் கொள்கையை ரத்து செய்ய இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.  
Tags:    

Similar News