செய்திகள்
பின்லாந்து பாராளுமன்றம்

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை - பின்லாந்து அரசு மறுப்பு

Published On 2020-01-13 06:58 GMT   |   Update On 2020-01-13 06:58 GMT
பின்லாந்து நாட்டில் தொழிலாளர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்ததாக பரவி வந்த தகவல் உண்மையானது அல்ல என பின்லாந்து அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹெல்சின்கி:

ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சன்னா மரீன் கடந்த டிசம்பர் 6-ந்தேதி பதவி ஏற்றார். உலகின் இளம் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர் பின்லாந்தின் 3-வது பெண் பிரதமர் ஆவார். இவர் பதவி ஏற்றதில் இருந்தே நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இதற்கிடையே, பின்லாந்தில் தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும். மீதம் உள்ள 3 நாட்கள் விடுமுறை, ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற அதிரடி அறிவிப்பை பிரதமர் சன்னா மரீன் வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. 

ஆனால் அந்த தகவல் உண்மையானதல்ல என பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் போக்குவரத்து அமைச்சராக இருந்த சன்னா மரீன் அரசின் ஒரு குழு விவாதத்தில் இந்த யோசனையை சுருக்கமாக முன்வைத்தார், ஆனால் அவர் பிரதமரான பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை, என பின்லாந்து அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. 



இந்த தவறான தகவல், கடந்த 2ம் தேதி பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த பிரபல செய்தித்தாளின் இணையதள பக்கத்தில் வெளியான ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

‘அந்த தகவலின் அடிப்படை என்னவென்றால், பின்னிஷ் பிரதமர் தனது முந்தைய கருத்துக்களை செயல்படுத்த முனைகிறாரா என்று நாங்கள் பார்க்க விரும்பினோம். ஆனால் இந்த நேரத்தில் அந்த விவகாரம் குறித்த உண்மையான தகவல்களை சரிபார்க்க தவறிவிட்டோம்’ என அந்த செய்தியை முதலில் பதிவிட்டவர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

பின்லாந்தில் தொழிலாளர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற செய்தி பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள செய்தித்தாள்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News