செய்திகள்
கட்டிடத்தின் மீது மோதி நொறுங்கிய விமானம்

கஜகஸ்தான் விமான விபத்து- 14பேர் பலி

Published On 2019-12-27 03:50 GMT   |   Update On 2019-12-27 07:55 GMT
கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டி நகரில் இருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
அல்மட்டி:

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடு கஜகஸ்தான். ஆசிய கண்டத்தில் இருக்கிறது. கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரம் அல்மட்டி.

அல்மட்டி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ‘பெக்ஏர் ஜெட்’ பயணிகள் விமானம் தலைநகர் நூர்-சுல்தான் நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்தது. விமான நிலையம் அருகே உள்ள 2 மாடி கட்டிடத்தில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் விமானம் பல்வேறு துண்டுகளாக நொறுங்கியது. அதில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டது.


அவசர உதவி மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். பல்வேறு மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நொறுங்கிய விமானத்தில் இருந்து பயணிகளை மீட்டனர்.

விமானம் கட்டிடத்தில் மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள். இதை கஜகஸ்தான் அரசு அறிவித்து உள்ளது. அதே நேரத்தில் இந்த விபத்தில் 7 பேர் பலியானதாக கஜகஸ்தான் நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது. விமானத்தில் இருந்த 35 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

காயம் அடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். லேசான காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்கள்.

விமான விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு கஜகஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News