செய்திகள்
நிர்மலா சீதாராமன்

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்

Published On 2019-12-14 01:59 GMT   |   Update On 2019-12-14 01:59 GMT
‘போர்ப்ஸ் பத்திரிகை’ வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடம்பிடித்து உள்ளார்.
நியூயார்க் :

அமெரிக்காவின் பிரபல ‘போர்ப்ஸ்’ பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 100 பேர் கொண்ட இந்த பட்டியலில் இடம்பெறுவது மிகப்பெரும் கவுரவமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பத்திரிகை 2019-ம் ஆண்டுக்கான சக்தி வாய்ந்த பட்டியலை தற்போது வெளியிட்டு உள்ளது.

இந்த பட்டியலில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடத்தை பிடித்து உள்ளார். ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தவர்களின் குடியுரிமைக்காக போர்க்குரல் எழுப்பி வரும் மெர்க்கல் தொடர்ந்து 9-வது முறையாக முதலிடத்தை தக்க வைத்திருக்கிறார். அவரை தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்டே 2-வது இடத்தையும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி 3-வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.

இந்தியாவின் நிர்மலா சீதாராமன் (வயது 60), இந்த பட்டியலில் 34-வது இடத்தை பிடித்து உள்ளார். இந்தியாவின் முதல் பெண் நிதி மந்திரியும், முதல் முழுநேர பெண் ராணுவ மந்திரியுமான நிர்மலா சீதாராமன் முதல்-முறையாக இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளார்.



மேலும் எச்.சி.எல். கார்பரே‌‌ஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோ‌ஷினி நாடார் மல்கோத்ரா (54-வது இடம்), பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார் ‌ஷா (65-வது இடம்) உள்ளிட்ட இந்திய பெண்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

பில்கேட்ஸ் அறக்கட்டளை இணை நிறுவனர் மெலிண்டா கேட்ஸ் (6-வது இடம்), ஐ.பி.எம். தலைமை செயல் அதிகாரி கின்னி ரோமெட்டி (9), பேஸ்புக் நிறுவனத்தின் ஷெரில் சங்பெர்க் (18), வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா (29), நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா (38), டிரம்பின் மகள் இவாங்கா (42), பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (81) ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக சர்வதேச தலைவர்களை கண்டித்து உலக அளவில் கவனம் ஈர்த்த சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், 16 வயது சிறுமியுமான கிரேட்டா தன்பெர்க் இந்த பட்டியலில் 100-வது இடத்தை பிடித்து சாதித்துள்ளார்.
Tags:    

Similar News