செய்திகள்
ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம்ஜாங் அன்

அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றி அமெரிக்காவுடன் பேச்சுக்கு வடகொரியா புதிய நிபந்தனை

Published On 2019-10-26 18:46 GMT   |   Update On 2019-10-26 18:46 GMT
அமெரிக்காவுடன் அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றி பேச்சு நடத்துவதற்கு வடகொரியா புதியதொரு நிபந்தனையை விதித்துள்ளது.
பியாங்யாங்:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வடகொரியா சோதித்து வந்தது. இதன்காரணமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. இதன்காரணமாக இரு நாடுகள் இடையே பகைமை நிலவி வந்தது.

ஆனால் கடந்து ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம்ஜாங் அன்னும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி பேசினர். இதில், அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றி தொடர்ந்து பேச இரு தலைவர்களும் முடிவு எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து வியட்னாமில் 2-வது முறையாக இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேசினர். அந்த பேச்சு வார்த்தை இணக்கமாக நடைபெறாமல் முறிந்தது.  ஆனாலும் இரு தலைவர்களிடையே தனிப்பட்ட உறவு நன்றாக இருக்கிறது.

வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால்தான் அந்த நாட்டின் மீதான தடைகள் விலக்கப்படும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. ஆனால் பகுதி அளவாவது பொருளாதார தடைகளை விலக்க வேண்டும் என்று வடகொரியா கோரி வருகிறது. இதன்காரணமாக இரு தரப்பு தொடர் பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவுடன் அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றி பேச்சு நடத்துவதற்கு வடகொரியா புதியதொரு நிபந்தனையை விதித்துள்ளது.

இதையொட்டி அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் நடந்த அணிசேரா இயக்க மாநாட்டில், வடகொரியா நாடாளுமன்ற சபாநாயகர் சோ ரியாங் ஹே பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றி அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார். ஆனால் அமெரிக்கா, எங்கள் மீதான விரோத நிலைப்பாட்டை கைவிட வேண்டும். எங்கள் மீதான ராணுவ, அரசியல் அச்சுறுத்தல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதன்பின்னர்தான் பேச முடியும்” என்று குறிப்பிட்டார். 
Tags:    

Similar News