செய்திகள்
எஸ். ஜெய்சங்கர்

காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் தரப்பு சமரசத்தை ஏற்கவே மாட்டோம்: இந்தியா திட்டவட்டம்

Published On 2019-10-02 02:01 GMT   |   Update On 2019-10-02 02:01 GMT
காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் தரப்பு சமரசத்தை ஏற்கவே மாட்டோம் என்று இந்தியா உறுதிபட கூறி உள்ளது.
வாஷிங்டன் :

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து கொண்டு விட்டு, வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றார்.

அங்கு அவர் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை சந்தத்து பேசினார்.

இந்திய, அமெரிக்க இரு தரப்பு உறவினை மேலும் வலுப்படுத்துவதற்கு கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து அவர், மைக் பாம்பியோவிடம் விவாதித்தார்.

மேலும், பிராந்திய அளவிலும், உலக அளவிலுமான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் இந்திய நிருபர்களையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்வதற்கு தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீப காலத்தில் கூறி வருவது பற்றி அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஜெய்சங்கர், “இதில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா தெளிவாக உள்ளது. இந்த பிரச்சினையில் மூன்றாம் தரப்பு சமரசத்தை ஏற்கவே மாட்டோம். விவாதிக்கப்படவேண்டிய எந்த ஒரு விவகாரமும், இரு தரப்பிலும் மட்டுமே விவாதிக்கப்படும்” என்று உறுதிபட பதில் அளித்தார்.



மேலும் அவர் கூறும்போது, “இது யாருடைய பிரச்சினை? இது எங்கள் பிரச்சினை. இதில் யார் முடிவு எடுக்க வேண்டும்? நாங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். இதில் வேறு யாராவது சமரசம் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம். நீங்கள் (டிரம்ப்) என்ன வேண்டுமானாலும் முன் வந்து கூறலாம். ஆனால் அது எங்களுக்கு பொருந்தாது என்று நாங்கள் முடிவு எடுத்தால், நிச்சயமாக அது நடக்காது” என பதில் அளித்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் இடையே நடந்த சந்திப்புகளின்போது காஷ்மீரில் தற்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேச்சு வந்தது. அரசியல் சாசனம் பிரிவு 370-ஐ ரத்து செய்ததைப் பொறுத்தமட்டில் பாதிக்கு மேற்பட்ட கூட்டங்களில் அது வந்திருக்கலாம். மற்றவற்றில் வராமல் இருந்திருக்கலாம். சரியாக கணக்கிடுவது கடினம். என்னிடம் வந்தவர்கள் எல்லாரும் அதுபற்றிய கேள்வியுடன் வரவில்லை. வெளிப்படையாக சொல்கிறேன். பெரும்பாலோர் இரு தரப்பு உறவு பற்றியே கவனம் செலுத்தினர்” என்று கூறினார்.

ஹூஸ்டனில் நடந்த ‘மோடி நலமா?’ நிகழ்ச்சியின்போது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்தாரா என்பது பற்றிய கேள்வி எழுந்தது.

அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், இது ஊடகங்களால் தவறாக திரிக்கப்பட்டு இருக்கிறது. அவர் அவ்வாறு கூறவில்லை. அமெரிக்க அரசியலில் நாம் தலையிடுவது இல்லை. இந்த நாட்டில் என்ன நடந்தாலும், இது அவர்களின் உள்நாட்டு அரசியல். இது எங்கள் அரசியல் அல்ல என்பதுதான் எங்களின் நிலைப்பாடு” என்றும் தெளிவுபடுத்தினார். 
Tags:    

Similar News