செய்திகள்
துப்பாக்கிச்சூடு நடந்த இடம்

டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

Published On 2019-09-02 04:34 GMT   |   Update On 2019-09-02 04:34 GMT
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள டெக்சாசின் ஒடேசா மற்றும் மிட்லாண்ட் நகரங்களுக்கு இடையே நேற்று முன்தினம் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள சாலையில் அபாயகரமான முறையில் அதிவேகத்தில் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, டிரைவரை காரில் இருந்து இறங்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

ஆனால் அந்த டிரைவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 3 போலீசாரின் உடலில் குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதையடுத்து, அங்கிருந்து காரில் தப்பி சென்ற அந்த நபர், வழியில் தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொண்டே சென்றார்.

கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் என அனைவரையும் சுட்டதில், பலர் குண்டு பாய்ந்து விழுந்தனர்.

இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டுக்கு 5 பேர் பலியாகினர் என்றும், 20க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 2 வயது குழந்தை உள்பட 21 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக இந்த தாக்குதலில் ஈடுபட்டார்? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து டெக்சாஸ் மாகாண போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News