செய்திகள்
ஆண்டனி லெவண்டோஸ்கி

கூகுளின் ரகசிய தகவல்கள் திருட்டு -உபெர் நிறுவன முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

Published On 2019-08-28 10:47 GMT   |   Update On 2019-08-28 10:47 GMT
உபெர் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஆண்டனி லெவண்டோஸ்கி, கூகுள் நிறுவத்தின் வர்த்தக ரகசியங்களை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஆண்டனி லெவண்டோஸ்கி. இவர் கடந்த 2016 ம் ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறி ஓட்டோ என்ற போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கினார். பின்பு அந்த நிறுவனத்தை உபெர் கையகப்படுத்தியது. பின்னர் உபெர் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், லெவண்டோஸ்கி கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் முன், கூகுள் நிறுவனத்தின் தானியங்கி வாகனங்கள் திட்டத்தில் உள்ள முக்கிய வர்த்தக தகவல்களை சட்ட விரோதமாக ஹார்ட் டிஸ்க்கில் பதிவிறக்கம் செய்துள்ள காரணத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். விசாரணைக்குப் பிறகு அவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் லெவண்டோஸ்கி தரப்பு வழக்கறிஞர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தகவல்களை அவர் பதிவிறக்கம் செய்யும்போது அவர் கூகுள் நிறுவன ஊழியர்தான். மேலும் அந்த தகவல்கள் உபெர் அல்லது வேறு எந்த நிறுவனத்திற்கோ தரப்படவில்லை, எனவே அவர் நிரபராதி என தெரிவித்து வருகின்றனர். 

லெவண்டோஸ்கி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 2,50,000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கூகுள் நிறுவனத்தின் தானியங்கி வாகனங்கள் திட்டக் குழுவில் லெவண்டோஸ்கியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News