செய்திகள்
நீர்மூழ்கி கப்பலின் கதவை திறக்கும் முயற்சியில் கடற்படை வீரர்.

கடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு

Published On 2019-07-13 17:24 GMT   |   Update On 2019-07-13 17:24 GMT
போதை பொருள் கடத்தி சென்ற நீர்மூழ்கி கப்பலை கடலில் குதித்து தடுத்து நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரரின் வீரதீர செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வாஷிங்டன்:

அமெரிக்க நாட்டின் கடல் எல்லை வழியாக கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோதமாக போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு கடற்படை சார்பில் சிறிய ரக ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் எல்லைகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பசிபிக் கடலின் கிழக்கு பகுதியின் கொலம்பியா-ஈக்வடார் கடற்பரப்பு பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. 

அப்போது, கடற்பரப்பின் மேற்பரப்பில் பாதி தெரிந்த அளவில் நீர்மூழ்கி கப்பல் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. கண்காணிப்பு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவின் அடிப்படையில் இரண்டு படகுகளில் அமெரிக்க கடற்படை வீரர்கள் நீர்மூழ்கி கப்பல் சென்று கொண்டிருந்த பகுதி நோக்கி விரைந்தனர். 

கடற்படை வீரர்கள் பின்தொடர்வதை அறிந்த போதை பொருள் கடத்தல் கும்பல் நீர்மூழ்கி கப்பலை வேகமாக இயக்கியது. ஆனாலும், அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்த நீர்மூழ்கி கப்பல் மீது திடீரென குதித்தார். நீர்மூழ்கி கப்பலின் கதவை வேகமாக உதைத்து கப்பலை உடனடியாக நிறுத்தும்படி கடத்தல்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

இதைத்தொடர்ந்து, கடத்தல்காரர்கள் தங்கள் நீர்மூழ்கி கப்பலை நிறுத்தி சரணடைந்தனர். இதையடுத்து, நீர்மூழ்கி கப்பலில் போதை பொருள் கடத்திய 5 பேரை அமெரிக்க கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 ஆயிரம் கிலோ அளவிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 232 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார்1,590 கோடி ரூபாய்) என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கடத்தல்காரர்களின் நீர்மூழ்கி கப்பலை தடுத்து நிறுத்த கடலில் குதித்த கடற்படை வீரரின் வீரதீர செயலை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.   

Tags:    

Similar News