search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மூழ்கி கப்பல்"

    • ஆழ்கடல் சுற்றுப்பயண திட்டங்களை காலவரையின்றி மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
    • அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2 பயணங்கள் திட்டமிடப்பட்டிருந்தது.

    1912ம் வருடம், "டைட்டானிக்" எனும் சொகுசு கப்பல் வட அட்லாண்டிக் கடலில் தனது முதல் பயணத்திலேயே மூழ்கியதும், 1500 பேர் பலியானதும், உலகளவில் இன்று வரை பேசப்படும் ஒரு சோக நிகழ்வாக இருக்கிறது.

    ஆழ்கடலில் தரைதட்டி நிற்கும் அந்த "டைட்டானிக்" கப்பலை காண அவ்வப்போது முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அத்தகைய ஒரு முயற்சியாக இரு வாரங்களுக்கு முன், ஆழ்கடல் ஆராய்ச்சி சுற்றுப்பயணத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஓஷன்கேட் நிறுவனத்தின் "டைட்டன்" நீர்மூழ்கியில், டைட்டானிக் கப்பலை காண அதன் மாலுமி உட்பட 5 பேர் பயணித்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த நீர்மூழ்கி வெடித்து, அதில் பயணம் செய்த ஐவரும் பலியானார்கள். இதனால் ஆழ்கடல் சுற்றுப்பயண திட்டங்களை காலவரையின்றி மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

    இதற்கிடையே, அடுத்த ஆழ்கடல் சுற்றுப்பயணத்துக்கான ஓஷன்கேட் நிறுவன விளம்பரம் தொடர்ந்து இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டைட்டானிக் கப்பலை காண விரும்புவோருக்கான சுற்றுபயண விபரங்களையும், கட்டணத்தையும் அதன் இணையதளத்தில் மீண்டும் விளம்பரப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

    இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் விவரங்களின்படி, ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை காணும் சுற்றுப்பயணத்திற்கு பயணத்தொகை சுமார் ரூ.2 கோடிக்கு மேலாகிறது. ஒரு பயணம் அடுத்த ஆண்டு ஜூன் 12ல் தொடங்கி ஜூன் 20 வரையிலும் மற்றொன்று ஜூன் 21 தொடங்கி ஜூன் 29 வரையிலும் என 2 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

    முதல் நாளன்று பயணிகள், கடலோர நகரமான செயின்ட் ஜான்ஸுக்கு வர வேண்டும். அதன் பிறகு தங்களுடன் பயணம் செய்யும் குழுவினரை அவர்கள் சந்தித்து கப்பலில் ஏறுவார்கள். அக்குழு நீர்மூழ்கியில் டைட்டானிக் புதையுண்ட இடத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கிருந்து டைட்டானிக் மூழ்கிய இடத்திற்கான 400 நாட்டிகல் மைல் பயணத்தை தொடங்கும் போது, கப்பலில் வாழ்க்கைமுறையைப் குறித்து பயணிகள் உணர்ந்திருப்பார்கள்.

    இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிறுவனம், காணாமல் போன, "டைட்டன்" நீர்மூழ்கியை தேடும் பணிகள் நடந்து வரும்போதே, "துணை பைலட்" (sub pilot) பணிக்கு ஆட்களை தேர்வு செயவ்து தொடர்பாக இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்ததும், அதற்கு எழுந்த கடும் விமர்சனங்களால், அது அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • நீண்ட தேடலுக்கு பிறகு நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
    • இந்த பயங்கர விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்படை விசாரணையை தொடங்கியது.

    வாஷிங்டன்:

    ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு சென்றது.

    வட அட்லாண்டிக் கடலின் கேப் கோட் எனும் இடத்திலிருந்து, கிழக்கே 900 மைல் தொலைவில் சுமார் 13,000 அடி ஆழத்தில், அதனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது. நீண்ட தேடுதலுக்கு பின், துரதிர்ஷ்டவசமாக, அது வெடித்து சிதறியதாகவும், இதில் பயணித்த அனைவரும் பலியானார்கள் எனவும் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த பயங்கர விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்படை விசாரணையை தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித எச்சங்களை மீட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

    டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடரில் உள்ள துறைமுகத்திற்கு திரும்புவது நீர்மூழ்கிக் கப்பல் ஏன் வெடித்தது என்பதற்கான விசாரணையின் முக்கிய பகுதியாகும் என தெரிவித்தது.

    • கடலுக்கடியில் இருந்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • விசாரணையில், நீர்மூழ்கி கப்பலில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகலாம்.

    ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த "ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ்" எனும் நிறுவனத்தின் "டைட்டன்" எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் "டைட்டானிக்" கப்பலை காண, 5 பேர் கொண்ட குழு சென்றது. ஆனால், வட அட்லாண்டிக் கடலின், கேப் கோட் எனும் இடத்திலிருந்து, கிழக்கே 900 மைல் தொலைவில், சுமார் 13,000 அடி ஆழத்தில், அதனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது.

    நீண்ட தேடுதலுக்கும் பின்னர், துரதிர்ஷ்டவசமாக, அது வெடித்து சிதறியதாகவும், இதில் பயணித்த அனைவரும் பலியானார்கள் எனவும் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த பயங்கர விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்படை விசாரணையை தொடங்கியுள்ளது என்று அதன் உயர் அதிகாரி ஜான் மௌகர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது:

    இந்த பேரழிவு குறித்தும், கப்பலில் இருந்த 5 பேரின் இறப்புகள் குறித்தும் விசாரிக்க அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரப்பூர்வமாக ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது. இதற்கு கேப்டன் ஜேசன் நியூபாவர் தலைமை புலனாய்வாளராக இருக்கப் போகிறார். உலகளவில் கடல்சார் களத்தின் பாதுகாப்பை மேம்படுத்த தேவையான பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதே எனது முதன்மை குறிக்கோள். வெடிப்புக்கான காரணத்திற்கான ஆதாரங்களை சேகரிப்பதில் புலனாய்வாளர்கள் பணியாற்றுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடலுக்கடியில் இருந்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தலைமைப் புலனாய்வாளர் கேப்டன் ஜேசன் நியூபாவர் கூறினார். எனினும், விசாரணைக்கான காலக்கெடுவை அவர் தெரிவிக்கவில்லை.

    அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், பிரெஞ்சு கடல் விபத்து விசாரணை வாரியம் மற்றும் பிரிட்டன் கடல் விபத்து புலனாய்வு பிரிவு உட்பட பிற தேசிய மற்றும் சர்வதேச விசாரணை அதிகாரிகளுடன் அமெரிக்க புலனாய்வாளர்கள் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்.

    முன்னதாக, கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், அட்லாண்டிக் பெருங்கடலில் "டைட்டன்" நீர்மூழ்கி வெடிவிபத்தில் உருக்குலைந்தது குறித்து அதிகாரிகளை கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறியது. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை, தானும் இதில் இணைந்து விசாரணையை வழி நடத்தும் என கூறியிருந்தது.

    இந்த புலனாய்வில், நீர்மூழ்கி கப்பலில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நீண்ட தேடலுக்கு பிறகு நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
    • ஷேசாதா தாவூத்தின் மகன் சுலேமான் தாவூத், துணிச்சலான இப்பயணத்தைக் கண்டு பயந்தார்.

    கடலில் மூழ்கிய "டைட்டானிக்" கப்பல் பாகங்களை காண்பதற்காக  சமீபத்தில், "ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ்" எனும் ஆழ்கடல் சுற்றுலா நிறுவனத்திற்கு சொந்தமான "டைட்டன்" என்ற நீர்மூழ்கிக்கப்பலில் 5 பேர் சென்றனர். 

    நான்கு நாட்களுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக் கடலில் அது காணாமல் போனது. இதனை கண்டுபிடித்து பயணித்தவர்களை உயிருடன் மீட்பதற்கு ஒரு பன்னாட்டு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை அமெரிக்க கடலோர காவற்படை முடுக்கி விட்டிருந்தது.

    ஆனால் நீண்ட தேடலுக்கு பிறகு அதன் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், அக்கப்பல் வெடித்து சிதறி இருப்பதாகவும் அதில் பயணித்த பாகிஸ்தானைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஷேசாதா தாவூத், அவரது மகன் உள்ளிட்ட 5 பேரும் பலியானதாக அறிவித்தது. டைட்டானிக் கப்பலில் இருந்து 1,600 அடி (488 மீட்டர்) தொலைவில் 'டைட்டன்' நீர்மூழ்கிக் கப்பலின் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

    இச்செய்தி வெளிவந்ததும், மிகுந்த வேதனையோடு கருத்துக்களை வெளியிட்ட பாகிஸ்தான் தொழிலதிபர் ஷேசாதா தாவூத்தின் மூத்த சகோதரி, தான் "முற்றிலும் மனம் உடைந்துவிட்டதாக" கூறினார். மேலும் அவர் கூறியதாவது:

    ஷேசாதா தாவூத்தின் மகன் சுலேமான் தாவூத், துணிச்சலான இப்பயணத்தைக் கண்டு பயந்தார். ஆழ்கடலில் மூழ்கிய "டைட்டானிக்" கப்பலை காண வேண்டும் எனபதில் ஆர்வம் கொண்ட ஷேசாதாவிற்கு இது முக்கியமானதாக இருந்ததால், அவர் மகனான சுலேமான் தாவூத் செல்ல நேர்ந்தது. உலகம் முழுவதும் இவ்வளவு அதிர்ச்சியையும், இவ்வளவு சஸ்பென்ஸையும் சந்திக்க நேர்ந்தது குறித்து நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். தனிப்பட்ட முறையில் அவர்களை நினைத்து மூச்சு விடுவதே கடினமாக இருந்தது. "ஒரு மில்லியன் டாலர்கள்" அளித்திருந்தாலும், நான் "டைட்டன்" நீர்மூழ்கி கப்பலில் ஏறியிருக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    இறந்தவர்களில் ஷேசாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத்துடன், பிரிட்டிஷ் ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் "ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ்" நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்டாக்டன் ரஷ் ஆகியோரும் கப்பலில் இருந்தனர்.

    • நீர் மூழ்கியின் பகுதி உள் வெடிப்புக்கு உள்ளானதில் அதில் இருந்த அனைவரும் உயிர் இழந்தது உறுதியாகி உள்ளது.
    • நீர் மூழ்கி எப்படி வெடித்து சிதறியது என்பதை அறிந்து கொள்வதற்காக அந்த பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    பாஸ்டன்:

    இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 1912-ம் ஆண்டு புகழ் பெற்ற டைட்டானிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் 2,500-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்கள் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது வழியில் எதிர்பாராத விதமாக அந்த கப்பல் பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கியது. இந்த மோசமான விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். கடலுக்குள் மூழ்கிய அந்த கப்பல் அமெரிக்காவின் நியூபவுண்ட்லாண்ட் தீவுக்கு 740 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் உடைந்து கிடந்தது 1985-ம் ஆண்டு கண்டறியப்பட்டது.

    அதன் பிறகு இந்த கப்பலை கடல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், திரைப்பட துறையினர் போன்றவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று பார்வையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளை அழைத்த செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ் பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் நீர் மூழ்கி கப்பலை வடிவமைத்தது.

    இந்த நீர் மூழ்கி கப்பலுக்கு டைட்டன் நீர் மூழ்கி என பெயரிடப்பட்டது. இதில் அதிகபட்சமாக 5 பேர் வரை பயணம் செய்ய முடியும். டை்டானிக் கப்பலில் மிச்சம் கிடக்கும் உடைந்த பாகங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் கப்பலில் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கிருந்த டைட்டன் நீர்மூழ்கியில் டைட்டானிக் கப்பலை நோக்கி ஆழ்கடல் பயணத்தை மேற்கொள்வார்கள். டைட்டானிக்கை நெருங்கி நீர்மூழ்கியின் காட்சி வழி மூலம் அதனை பார்ப்பார்கள். இந்த நிலையில் டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக இங்கிலாந்து தொழில் அதிபர் ஹமிஷ் ஹார்டிங், ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டாக்டன்ரஷ், நீர் மூழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படை முன்னாள் கமாண்டருமான பால் ஹன்றி நார்கியோலே, பாகிஸ்தான் தொழில் அதிபர் ஷேஸாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் சென்றனர். காலை 6 மணிக்கு அவர்கள் கடலுக்குள் இறக்கி விடப்பட்டனர். மாலைக்குள் இவர்கள் மீண்டும் கப்பலுக்கு திரும்பி இருக்க வேண்டும்.

    ஆனால் டைட்டானிக் கப்பல் உடைந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்த போது நீர் மூழ்கிக்கும், போலார் பிரின்ஸ் கப்பலுக்கும் இடையே இருந்த தகவல் தொடர்பு சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு பிறகு துண்டிக்கப்பட்டது.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அமெரிக்கா, கனடாவின் கடலோர காவல் படை கப்பல்கள், விமானங்களுடன், வணிக கப்பல்களும் குறிப்பிட்ட பகுதியில் முற்றுகையிட்டு தேடுதல் பணியில் ஈடுப்பட்டது. ஆனால் நீர் மூழ்கி கப்பலில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இருந்த போதிலும் அவர்களை பத்திரமாக மீட்க கடந்த 4 நாட்களாக முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து சிதறி அதில் பயணம் செய்த பாகிஸ்தான் தொழில் அதிபர், அவரது மகன் உள்ளிட்ட 5 கோடீசுவரர்களும் உயிர் இழந்தது தற்போது உறுதியாகி உள்ளது. இது குறித்து அமெரிக்க கடலோர காவல் படைப்பிரிவு தளபதி ஜான் மாகர் கூறியதாவது:-

    நீர்மூழ்கி மாயமான பகுதியில் தேடுதல் பணியின் போது அதன் சிதறிய பாகங்கள் ரிமோட் நீர் மூழ்கி சாதனம் (ஆர்.ஓ.வி.) மூலம் கண்டறியப்பட்டு உள்ளது.

    டைட்டானிக் கப்பல் உடைந்து கிடக்கும் பகுதிக்கு சுமார் 1,600 அடி தூரத்தில் அந்த நீர் மூழ்கியின் பாகங்கள் கடல் படுகையில் சிதறி கிடக்கிறது. கடலுக்குள் அழுத்தத்தை தாங்குவதற்கான நீர் மூழ்கியின் பகுதி உள் வெடிப்புக்கு உள்ளானதில் அதில் இருந்த அனைவரும் உயிர் இழந்தது உறுதியாகி உள்ளது. அவர்களது உடல்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது. நீர் மூழ்கி எப்படி வெடித்து சிதறியது என்பதை அறிந்து கொள்வதற்காக அந்த பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கப்பல் காணாமல் போன இடத்தில் "நீருக்கடியிலிருந்து சத்தம்" கேட்பதாக தகவல்.
    • நீர்மூழ்கி கப்பலில் உள்ள 5 பேரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

    "வைட் ஸ்டார்லைன்" எனும் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான டைட்டானிக் எனும் சொகுசு கப்பல், 1912-ம் வருடம் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 12-ம் தேதி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகத்திற்கு தொடங்கியது.

    முதல் பயணத்திலேயே 15-ம் தேதியன்று இரவு, வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றின் மேல் மோதியதால் அக்கப்பல் மூழ்கியது. இதில் 1500 பேருக்கு மேல் பலியானார்கள். அந்த துயர சம்பவம் நடந்து பல வருடங்களாகியிருந்தாலும், ஆழ்கடலுக்கடியில் தரை தட்டி நிற்கும் அந்த கப்பலை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள அவ்வப்போது பலர் ஆபத்தான முயற்சிகளை செய்வதுண்டு.

    தற்போது 21-அடி நீளமுள்ள ஒரு மினி நீர்மூழ்கி கப்பலில் 5 பேர் கொண்ட சுற்றுலா குழு ஒன்று டைட்டானிக் கப்பலின் மீதமுள்ள பாகங்களை காணச்சென்று, துரதிர்ஷ்டவசமாக காணாமல் போனது. இதனை தேடும் முயற்சி முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இன்னும் 24 மணி நேரமே போதுமான ஆக்சிஜன்தான் இருப்பு உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    இதற்கிடையே நேற்று சோனார் எனப்படும் கருவிகளை பயன்படுத்தி வடக்கு அட்லாண்டிக் பகுதியில் கப்பல் காணாமல் போன இடத்தில் "நீருக்கடியிலிருந்து சத்தம்" கேட்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்தது.

    இந்நிலையில், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்களை நீர்மூழ்கி ரோந்து வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால், அது காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் தானா என்பது குறித்த தகவலை வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

    மேலும், பிரித்தானிய நேரப்படி வியாழக்கிழமை 12.08 மணியளவில் ஆக்ஸிஜன் தீர்ந்துவிடும் என கூறப்பட்டுள்ளது. இதனால், நீர்மூழ்கி கப்பலில் உள்ள 5 பேரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட உடைந்த பாகங்கள் தொடர்பாக கூடுதல் விவரம் குறித்து பாஸ்டனில் பிற்பகல் 3 மணிக்கு செய்தியளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படுவதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

    • கடல் சமிக்ஞைகளை கண்டுபிடிக்கும் மிதவைகளும் ஆங்காங்கே போடப்பட்டன.
    • 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாக உள்ளது.

    வாஷிங்டன் :

    கடந்த 1912-ம் ஆண்டு, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரமாண்ட 'டைட்டானிக்' கப்பல், தனது முதல் பயணத்திலேயே சோகத்தை சந்தித்தது.

    வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதிய அந்தக் கப்பல், ஜல சமாதி ஆனது. அதில், கப்பலில் பயணித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    கனடா நாட்டின் நியூபவுண்ட்லாந்து தீவில் இருந்து 595 கி.மீ. தொலைவில், 13 ஆயிரம் அடி ஆழத்தில் அட்லாண்டிக்கின் மடியில் டைட்டானிக் கப்பலின் மிச்சங்கள் கிடக்கின்றன.

    'டைட்டானிக்' விபத்து நடந்து நூறாண்டுகள் கடந்த பின்பும் அதுகுறித்த அதீத ஆர்வம் உலக மக்களுக்கு உள்ளது. அதனால்தான், இந்த கப்பல் விபத்து அடிப்படையில் 1997-ல் வெளியான 'டைட்டானிக்' படம், உலகெங்கும் ஓடோ ஓடென்று ஓடி வசூலைக் குவித்தது.

    'டைட்டானிக்' மோகத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா வாஷிங்டனை சேர்ந்த 'ஓசன்கேட் எக்ஸ்படீசன்ஸ்' என்ற நிறுவனம், டைட்டானிக் மிச்சங்களை காண்பதற்கான ஆழ்கடல் சுற்றுலாவை கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது.

    அதற்காக வெறும் 22 அடி நீளமே உள்ள சிறிய நீர்மூழ்கி கலத்தை இந்த நிறுவனம் உருவாக்கியது. உறுதியான டைட்டானியம் மற்றும் கார்பன் இழைகளால் ஆன, 'டைட்டன்' என்ற இந்த நீர்மூழ்கியில், 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும். டைட்டானிக் கப்பல் மிச்சங்கள் கிடக்கும் பகுதிக்கு ஒரு கப்பலில் அழைத்துச் செல்லப்படுபவர்கள், அங்கிருந்து 'டைட்டன்' நீர்மூழ்கியில் 'டைட்டானிக்' கப்பலை நோக்கி ஆழ்கடல் பயணத்தை மேற்கொள்வார்கள். டைட்டானிக்கை நெருங்கி, நீர்மூழ்கியின் காட்சி வழி மூலம் அதை பார்த்து ரசிப்பார்கள்.

    இந்த முறை நீர்மூழ்கியில் 5 கோடீசுவரர்கள் சென்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-

    இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபரும், ஆழ்கடல் நீர்மூழ்கு சாகச வீரருமான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), பிரான்ஸ் நாட்டு கடற்படை முன்னாள் மாலுமியும், கடலியல் நிபுணருமான பால் ஹென்றி நர்கியோல் (77), 'டைட்டானிக்' ஆழ்கடல் சுற்றுலாவை நடத்தும் ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ் (61), பாகிஸ்தானின் பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஷசாதா தாவூத் (48), அவருடைய மகன் சுலைமான் தாவூத் (19).

    'போலார் பிரின்ஸ்' என்ற கப்பலில் இருந்து, 'டைட்டன்' நீர்மூழ்கி மூலம் இவர்கள் 5 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கடலுக்குள் இறக்கிவிடப்பட்டனர். மாலைக்குள் இவர்கள் மீண்டும் கப்பலுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதுதான் திட்டம்.

    ஆனால் நீர்மூழ்கி, ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய ஒன்றே முக்கால் மணி நேரத்தில், 'போலார் பிரின்ஸ்' கப்பலுடன் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

    அதைத் தொடர்ந்து பரபரப்பு பற்றிக் கொண்டது. அமெரிக்கா, கனடாவின் கடலோர காவல் படை கப்பல்கள், விமானங்களுடன், வணிக கப்பல்களும் குறிப்பிட்ட பகுதியை சூழ்ந்து தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கின. கடல் சமிக்ஞைகளை கண்டுபிடிக்கும் மிதவைகளும் ஆங்காங்கே போடப்பட்டன

    ஆனால் 'டைட்டன்' நீர்மூழ்கியில் இருந்து எந்த தகவலும் இல்லை. இது கடலுக்குள் இறங்கியபோது, 96 மணி நேரத்துக்கான ஆக்சிஜன் 'சப்ளை'யைத்தான் கொண்டிருந்தது. அது குறைந்துகொண்டே வரும் நிலையில், நேரத்துடன் போட்டி போட்டு நீர்மூழ்கியை கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியில் மீட்புப் படையினர் உள்ளனர். ஆனால், கடலுக்குள் சுமார் 4 கிலோமீட்டர் ஆழத்தில் தேடுதல், மீட்பில் ஈடுபடுவது என்பது எளிதான காரியம் அல்ல. அங்கு கற்பனைக்கு அப்பாற்பட்ட அழுத்தத்துடன், காரிருளும் சூழ்ந்திருக்கும்.

    இந்நிலையில் நேற்று ஒரு நல்ல செய்தியாக, கடலுக்கு அடியில் இருந்து சில சப்தங்களை தாங்கள் கண்டு பிடித்துள்ளதாக கனடா மீட்புப்படை விமானம் ஒன்று கூறியுள்ளது. அது, 'டைட்டன்' நீர்மூழ்கியில் இருந்துதான் வருகிறதா என உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் மீட்பு முயற்சியில் இது லேசான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றிக்கொண்டு, அமெரிக்கா, கனடா மீட்புப் படையினர், தேடுதலில் மும்முரமாகியுள்ளனர்.

    இந்நிலையில், குறிப்பிட்ட 'ஓசன்கேட்' நிறுவனம், போதுமான பாதுகாப்பு பரிசோதனைகளை செய்யாததுதான் விபத்துக்கு காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் கடல் நடவடிக்கைகளுக்கான இயக்குனராக பணிபுரிந்த டேவிட் லோக்ரிட்ஜ், திருப்திகரமான வெள்ளோட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளாமல், அதிக அழுத்தம் உள்ள ஆழ்கடல் பகுதிக்கு ஆட்களை அழைத்துச் செல்வது ஆபத்தாக முடியலாம் என்று கடந்த 2018-ம் ஆண்டே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

    இனிமேல், இதுபோன்ற ஆழ்கடல் பயண பாதுகாப்பில் குறிப்பிட்ட நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தும், அமெரிக்க அரசும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் என்பது நிச்சயம்.

    ஆனால் இப்போதைக்கு, 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாக உள்ளது.

    • நீர்மூழ்கி கப்பல் மாயமான இடத்தில் இருந்து சத்தம் வந்ததாக கனடா விமானப்படை தகவல்
    • ஆக்சிஜன் இன்னும் 24 மணி நேரமே போதுமானதாக இருப்பதால் தேடுதல் பணி தீவிரம்

    "வைட் ஸ்டார்லைன்" எனும் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான டைட்டானிக் எனும் சொகுசு கப்பல், 1912-ம் வருடம் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 12-ம் தேதி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகத்திற்கு தொடங்கியது. முதல் பயணத்திலேயே 15-ம் தேதியன்று இரவு, வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றின் மேல் மோதியதால் அக்கப்பல் மூழ்கியது. இதில் 1500 பேருக்கு மேல் பலியானார்கள்.

    அந்த துயர சம்பவம் நடந்து பல வருடங்களாகியிருந்தாலும், ஆழ்கடலுக்கடியில் தரை தட்டி நிற்கும் அந்த கப்பலை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள அவ்வப்போது பலர் ஆபத்தான முயற்சிகளை செய்வதுண்டு.

    தற்போது 21-அடி நீளமுள்ள ஒரு மினி நீர்மூழ்கி கப்பலில் 5 பேர் கொண்ட சுற்றுலா குழு ஒன்று டைட்டானிக் கப்பலின் மீதமுள்ள பாகங்களை காணச்சென்று, துரதிர்ஷ்டவசமாக காணாமல் போயிருக்கிறது. இதனை தேடும் முயற்சி முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இன்னும் 24 மணி நேரமே போதுமான ஆக்சிஜன்தான் இருப்பு உள்ளது. இதனால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு சிறு நற்செய்தி வெளியாகியுள்ளது.

    சோனார் எனப்படும் கருவிகளை பயன்படுத்தி அந்த நீர்மூழ்கி கப்பலை தேடும் அமெரிக்க கடலோர காவல்படை வடக்கு அட்லாண்டிக் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்கப்பல் காணாமல் போன இடத்தில் "நீருக்கடியிலிருந்து சத்தம்" கேட்பதாக தெரிவித்துள்ளது.

    "கனடா நாட்டின் P-3 விமானம், தேடுதல் பகுதியில் நீருக்கடியில் சத்தம் கண்டது. இதன் விளைவாக, சத்தங்களின் தோற்றத்தை ஆராயும் முயற்சியில் "ரிமோட் ஆபரேட்டட் வெஹிகிள்" எனப்படும் ROV வாகனத்தின் செயல்பாடுகள் இடமாற்றம் செய்யப்பட்டன" என்று அமெரிக்க கடலோர காவல்படையின் முதல் மாவட்டம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ளது. ROV தேடல்கள் "எதிர்மறையான முடிவுகளை அளித்தன, ஆனால் தொடர்கின்றன" என்று இராணுவக்கிளை கூறியது. இதன் தொடர்ச்சியாக எதிர்கால தேடல் திட்டங்களை தெரிவிக்க, கனடா நாட்டின் விமானத்தின் தரவு அமெரிக்க கடற்படை நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

    சுற்றுலாப் பயணிகள் இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் என்பதற்கு இந்த அறிவிப்பு மிகவும் ஊக்கமளிக்கும் அறிகுறியாகும்.

    கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து சுமார் 400 மைல் தொலைவில் மாயமான சிறிய நீர்மூழ்கிக் கப்பலுக்காக, அமெரிக்க மற்றும் கனடா நாட்டின் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள், சுமார் 7,600 சதுர மைல்கள் (20,000 சதுர கிலோமீட்டர்) பரப்பளவிற்கு கடலில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன.

    "டைட்டன்" என்று பெயரிடப்பட்ட இந்த மினி நீர்மூழ்கிக் கப்பலில், கட்டணம் செலுத்தி பயணிக்கும் 3 பயணிகள் இருந்தனர். அவர்கள், பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங்க், பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஹ்ஜாதா தாவூத், மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோர் ஆவார்கள்.

    ஓசேன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் (OceanGate Expeditions) நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டாக்டன் ரஷ் மற்றும் பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் இயக்குனர், பால்-ஹென்றி நார்ஜியோலெட் (Paul-Henri Nargeolet) ஆகியோரும் அக்கப்பலில் இருந்தனர்.

    • கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கியது.
    • அதன் சிதைந்த பாகத்தை காண சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீர்முழ்கி கப்பல் மாயமானது.

    லண்டன்:

    உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912-ம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சவுதாம்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு பயணித்தது. அப்போது அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 1,600 பேர் பலியாகினர்.

    பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கி.மீ. ஆழத்தில் சிதைந்து போயிருந்த கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.

    இந்நிலையில், டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தைப் பார்வையிட சில சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கி கப்பல் திடீரென மாயமானதாக பி.பி.சி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    நீர்மூழ்கி கப்பலில் 5 சுற்றுலா பயணிகள் சென்றிருக்கலாம் என தகவல் வெளியானது. மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    • தென் சீன கடல் பகுதி தொடர்பாக சீனாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் மோதல் இருந்து வருகிறது.
    • இந்தியாவும் இந்தோனசியாவும் தங்கள் வியூக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பரந்த அளவிலான பகுதிகளில் விரிவுப்படுத்தியுள்ளன.

    தென் சீன கடல் பகுதி தொடர்பாக சீனாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆசிய நாடுகளுக்கான ஒட்டுமொத்த ராஜ தந்திர ராணுவ நடவடிக்கையில் ஒரு பகுதியாக சீனாவுடன் மோதலில் ஈடுபட்டுள்ள இந்தோனேசியாவில், இந்தியா தனது நீர்மூழ்கி கப்பலை நிறுத்தியுள்ளது. 3 ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் எலக்ட்ரிக்கில் இயங்கும் இந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். சிந்து கேசரி நேற்று முன்தினம் சுந்தா ஜலசந்தி வழியாக சென்று ஜகார்த்தாவை அடைந்தது.

    ஆசிய நாடுகளுடன் போர் பயிற்சிகள், பரிமாற்றங்கள், போர் விமானங்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களை இயக்குவதற்கான பயிற்சி திட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் ஆயுதங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியா தொடர்ந்து பாதுகாப்பு முடிவுகளை மேம்படுத்தி வருகிறது. இந்தியாவும் இந்தோனசியாவும் தங்கள் வியூக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பரந்த அளவிலான பகுதிகளில் விரிவுப்படுத்தியுள்ளன.

    ×