search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நீர்மூழ்கி கப்பல் மாயமான இடத்தில் இருந்து சமிக்ஞை: தேடுதல் பணி தீவிரம்
    X

    நீர்மூழ்கி கப்பல் மாயமான இடத்தில் இருந்து சமிக்ஞை: தேடுதல் பணி தீவிரம்

    • நீர்மூழ்கி கப்பல் மாயமான இடத்தில் இருந்து சத்தம் வந்ததாக கனடா விமானப்படை தகவல்
    • ஆக்சிஜன் இன்னும் 24 மணி நேரமே போதுமானதாக இருப்பதால் தேடுதல் பணி தீவிரம்

    "வைட் ஸ்டார்லைன்" எனும் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான டைட்டானிக் எனும் சொகுசு கப்பல், 1912-ம் வருடம் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 12-ம் தேதி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகத்திற்கு தொடங்கியது. முதல் பயணத்திலேயே 15-ம் தேதியன்று இரவு, வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றின் மேல் மோதியதால் அக்கப்பல் மூழ்கியது. இதில் 1500 பேருக்கு மேல் பலியானார்கள்.

    அந்த துயர சம்பவம் நடந்து பல வருடங்களாகியிருந்தாலும், ஆழ்கடலுக்கடியில் தரை தட்டி நிற்கும் அந்த கப்பலை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள அவ்வப்போது பலர் ஆபத்தான முயற்சிகளை செய்வதுண்டு.

    தற்போது 21-அடி நீளமுள்ள ஒரு மினி நீர்மூழ்கி கப்பலில் 5 பேர் கொண்ட சுற்றுலா குழு ஒன்று டைட்டானிக் கப்பலின் மீதமுள்ள பாகங்களை காணச்சென்று, துரதிர்ஷ்டவசமாக காணாமல் போயிருக்கிறது. இதனை தேடும் முயற்சி முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இன்னும் 24 மணி நேரமே போதுமான ஆக்சிஜன்தான் இருப்பு உள்ளது. இதனால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு சிறு நற்செய்தி வெளியாகியுள்ளது.

    சோனார் எனப்படும் கருவிகளை பயன்படுத்தி அந்த நீர்மூழ்கி கப்பலை தேடும் அமெரிக்க கடலோர காவல்படை வடக்கு அட்லாண்டிக் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்கப்பல் காணாமல் போன இடத்தில் "நீருக்கடியிலிருந்து சத்தம்" கேட்பதாக தெரிவித்துள்ளது.

    "கனடா நாட்டின் P-3 விமானம், தேடுதல் பகுதியில் நீருக்கடியில் சத்தம் கண்டது. இதன் விளைவாக, சத்தங்களின் தோற்றத்தை ஆராயும் முயற்சியில் "ரிமோட் ஆபரேட்டட் வெஹிகிள்" எனப்படும் ROV வாகனத்தின் செயல்பாடுகள் இடமாற்றம் செய்யப்பட்டன" என்று அமெரிக்க கடலோர காவல்படையின் முதல் மாவட்டம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ளது. ROV தேடல்கள் "எதிர்மறையான முடிவுகளை அளித்தன, ஆனால் தொடர்கின்றன" என்று இராணுவக்கிளை கூறியது. இதன் தொடர்ச்சியாக எதிர்கால தேடல் திட்டங்களை தெரிவிக்க, கனடா நாட்டின் விமானத்தின் தரவு அமெரிக்க கடற்படை நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

    சுற்றுலாப் பயணிகள் இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் என்பதற்கு இந்த அறிவிப்பு மிகவும் ஊக்கமளிக்கும் அறிகுறியாகும்.

    கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து சுமார் 400 மைல் தொலைவில் மாயமான சிறிய நீர்மூழ்கிக் கப்பலுக்காக, அமெரிக்க மற்றும் கனடா நாட்டின் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள், சுமார் 7,600 சதுர மைல்கள் (20,000 சதுர கிலோமீட்டர்) பரப்பளவிற்கு கடலில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன.

    "டைட்டன்" என்று பெயரிடப்பட்ட இந்த மினி நீர்மூழ்கிக் கப்பலில், கட்டணம் செலுத்தி பயணிக்கும் 3 பயணிகள் இருந்தனர். அவர்கள், பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங்க், பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஹ்ஜாதா தாவூத், மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோர் ஆவார்கள்.

    ஓசேன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் (OceanGate Expeditions) நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டாக்டன் ரஷ் மற்றும் பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் இயக்குனர், பால்-ஹென்றி நார்ஜியோலெட் (Paul-Henri Nargeolet) ஆகியோரும் அக்கப்பலில் இருந்தனர்.

    Next Story
    ×