செய்திகள்
ஆலாமா இக்பால் சர்வதேச விமான நிலையம்

பாகிஸ்தான் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

Published On 2019-07-03 11:40 GMT   |   Update On 2019-07-03 11:40 GMT
பாகிஸ்தானில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
லாகூர்:

பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் மாகாணத்தில் ஆலாமா இக்பால் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் பயணிகள் தங்கள் விமான பயணத்தை மேற்கொள்வதற்காக விமான நிலைய வளாகத்தில் இருந்தனர்.

அப்போது திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதை சற்றும் எதிர்பாராத பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இந்த தாக்குதலில் சவுதி அரேபியாவுக்கு புனித பயணம் மேற்கொண்டு சொந்த நாடு திரும்பிய 2 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் ஒரு பயணி  படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தனிப்பட்ட பகை காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றது தெரிய வந்தது.

விமான நிலைய வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     
Tags:    

Similar News