செய்திகள்
ரஷிய அதிபர் புதின், டிரம்ப்-பின் நகைச்சுவையுணர்வை சிரித்தவாறு ரசித்த காட்சி

அமெரிக்க அதிபர் தேர்தலில் மூக்கை நுழைக்காதீர்கள் - புதினிடம் ஜோக் அடித்த டிரம்ப்

Published On 2019-06-28 09:31 GMT   |   Update On 2019-06-28 09:31 GMT
அமெரிக்க அதிபர் பதவிக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் தயவு செய்து தலையிடாதீர்கள் என ரஷிய அதிபர் புதினிடம் டிரம்ப் ஜோக் அடிக்க, அவரும் அதை ரசித்து மகிழ்ந்தார்.
டோக்கியோ:

ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடைபெறும்  ஜி20 உச்சிமாநாட்டுக்கு இடையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.

அமெரிக்கா-ரஷியா இடையிலான உரசல்களுக்கு காரணமான பல்வேறு முக்கிய விவகாரங்கள் மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக அவர்கள் இருவரும் ஆலோசித்தனர்.

முன்னதாக, இந்த சந்திப்பு தொடர்பான செய்திகளை சேகரிக்க அவர்களுடன் அமர்ந்திருந்த ஊடகவியலாளர்கள் இன்றைய பேச்சுவார்த்தை எதைச் சுற்றி அமையும்? என்று டிரம்ப்பிடம் கேட்டதுடன் வரும் 2020-ம் ஆண்டில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட வேண்டாம் என்று புதினை கேட்டுக் கொள்வீர்களா? என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு உடனடியாக பதிலளித்த டிரம்ப், ’நிச்சயமாக..,’ என்று சொன்னதுடன் அதே வேகத்தில் புதின் பக்கமாக திரும்பி, ‘தயவு செய்து தேர்தலில் தலையீடு செய்யாதீர்கள்’ என்று சிரித்துக் கொண்டே கூறினார்.



ரஷிய அதிபரும் டிரம்ப்-பின் நகைச்சுவையுணர்வை சிரித்தவாறு ரசித்த காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப்பை எதிர்த்து நின்ற ஜனநாயக கட்சி வேட்பாளரும் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஹிலாரி கிளிண்டனை தோற்கடிக்க ரஷிய அதிபர் புதின் மறைமுகமாக வேலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து இதற்காக அமெரிக்க அரசால் தனியாக ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News