செய்திகள்

சிறுமி ஷெரீன் கொலை வழக்கு- வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கியது அமெரிக்க நீதிமன்றம்

Published On 2019-06-27 05:11 GMT   |   Update On 2019-06-27 05:11 GMT
அமெரிக்காவில் சிறுமி ஷெரீன் கொலை வழக்கில் அவரது வளர்ப்பு தந்தை வெஸ்லி மேத்யூசுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹூஸ்டன்:

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வெஸ்லி மேத்யூஸ். இவரது மனைவி சினி மேத்யூஸ். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ரிச்சர்ட்சன் நகரில் வசித்து வருகிறார்கள். சாப்ட்வேர் என்ஜினீயர்களான இவர்கள் கடந்த ஆண்டு இந்தியா வந்த போது ஒரு ஆசிரமத்தில் இருந்து 3 வயது சிறுமியை தத்தெடுத்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றனர். அந்த குழந்தைக்கு ஷெரின் மேத்யூஸ் என பெயரிட்டனர்.
 
இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இரவு குழந்தை பால் குடிக்க மறுத்ததால் வீட்டுக்கு வெளியே நிறுத்தியபோது காணாமல் போய்விட்டதாக குழந்தையின் வளர்ப்பு தந்தை வெஸ்லி மேத்யூஸ், ரிச்சர்ட்சன் போலீசில் புகார் செய்தார். குழந்தையை கொடுமை செய்ததாக வெஸ்லி மேத்யூஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து, ஜாமீனில் விட்டனர். பின்னர், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சில தினங்களுக்கு பின்னர் வெஸ்லியின் வீட்டில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள ஒரு கால்வாயில் சிறுமி ஷெரின் மேத்யூசின் உடல் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் குழந்தை சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, வளர்ப்பு தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீது டல்லாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை இறுதிக்கட்ட விசாரணையின்போது வெஸ்லி மேத்யூஸ், குழந்தையை அடித்து காயப்படுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில், வாதப் பிரதிவாதங்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குழந்தையை சித்ரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக வெஸ்லி மேத்யூசுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தபிறகு பரோல் பெற முடியும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.



வெஸ்லியின் மனைவி சினி மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் அவர் மீதான வழக்கு கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக வெளியேறினார். 
Tags:    

Similar News