செய்திகள்

மலாவியில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டம்- அதிர்ஷ்டவசமாக தப்பிய அமெரிக்க தூதர்

Published On 2019-06-06 16:50 GMT   |   Update On 2019-06-06 16:50 GMT
மலாவியில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எதிர்க்கட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அங்கிருந்த அமெரிக்க தூதர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
லிலோங்வி:

மலாவியில் கடந்த மே 21 ந்தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளர் பீட்டர் முத்தாரிகா வெற்றி பெற்றார். மலாவி காங்கிரசு கட்சியின் தலைவர் லாசரஸ் சக்வேரா தோல்வியடைந்தார். இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த லாசரஸ், இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தேர்தலில் தில்லுமுல்லு செய்து பீட்டர் முத்தாரிகா வெற்றி பெற்றுவிட்டதாக கூறி, மலாவி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் லிலோங்வியில் உள்ள கட்சி தலைமையகத்தில் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் கற்களை வீசி தாக்கினர். இதனால், கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனால், மலாவி கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த அமெரிக்க தூதர் விர்ஜினியா பால்மர், அவசரம் அவசரமாக அங்கிருந்து வெளியேறினார். 

இதைபற்றி தூதர் பால்மர் கூறுகையில், ‘‘இது எனது பிரியாவிடை அழைப்பு. நான் தூதராக பணியாற்றிய நான்கரை ஆண்டு காலத்தில் மலாவிக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக நன்றி சொல்லிக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில், வெளியே போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். உடனே காவல்துறை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது. எனது பாதுகாவலர்கள் உடனடியாக செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக எவ்வித ஆபத்துமின்றி நாங்கள் வெளியேறினோம்” என கூறினார். 

தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், நாட்டில் அமைதியை ஏற்படுத்தவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பால்மர் வேண்டுகோள் விடுத்தார்.
Tags:    

Similar News