செய்திகள்

பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாத தாக்குதலை நடத்த அனுமதிக்க மாட்டோம் - இம்ரான் கான்

Published On 2019-03-08 18:12 GMT   |   Update On 2019-03-08 18:12 GMT
பாகிஸ்தான் மண்ணிலிருந்து எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பயங்கரவாத தாக்குதலை நடத்த அனுமதிக்க மாட்டோம் என இம்ரான் கான் கூறியுள்ளார். #ImranKhan
இஸ்லாமாபாத்:

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. அதையடுத்து, இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.

இத்தகைய சம்பவங்களால், இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.  

இதற்கிடையே பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது போன்று காட்டிக் கொள்கிறது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹிபீஸ் சயீது தலைமையிலான ஜமாத் உத் தவா, அதன் அறக்கட்டளையான பலா இ இன்சானியாத் பவுண்டேசன் ஆகியவற்றை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. அவற்றின் சொத்துகளை முடக்கி உள்ளது.

இந்நிலையில், லாகூரில் உள்ள ஜமாத் உத் தவா தலைமையகத்துக்கு பாகிஸ்தான் அரசு நேற்று ‘சீல்’ வைத்தது. 40 கி.மீ. தொலைவில் உள்ள அறக்கட்டளையின் தலைமையகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்து, ஹபீஸ் சயீது தனது ஆதரவாளர்களுடன் தலைமையகத்தை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 44 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.

பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, தலீபான், அல்கொய்தா, ஹக்கானி நெட்வொர்க் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் இயங்கி வருகின்றன.  புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.



பாகிஸ்தான், தன் மண்ணில் இயங்கி வருகிற பயங்கரவாத குழுக்கள் எதிர்காலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தாதபடிக்கும், பிராந்திய நிலைத்தன்மையை ஊக்குவிக்கிற வகையிலும் தொடர்ச்சியான மற்றும் மீற முடியாத நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழக்கூடாது, அவர்களுக்கு நிதி உதவிகள் போய்ச்சேராதவாறு தடை செய்யப்பட வேண்டும் என்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரையை பாகிஸ்தான் நிலை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தான் மண்ணிலிருந்து எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பயங்கரவாத தாக்குதலை நடத்த அனுமதிக்க மாட்டோம் என இம்ரான் கான் கூறியுள்ளார்.  #ImranKhan
Tags:    

Similar News