செய்திகள்

ஹபீஸ் சயீதை விசாரிக்க செல்லும் ஐநா அதிகாரிகளுக்கு விசா மறுப்பு - பாக். தூதரகம்

Published On 2019-03-07 14:41 GMT   |   Update On 2019-03-07 14:41 GMT
மும்பை ஓட்டல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையதை விசாரிக்கச் செல்லும் ஐ.நா. அதிகாரிகளுக்கு விசா தர பாகிஸ்தான் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. #HafizSaeed #PakistanblocksUNteam
நியூயார்க்:

இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையின் பல்வேறு இடங்களில் 26.11.2008 அன்று கடல் வழியாக புகுந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகள் வீசியும், துப்பாக்கியாலும் சுட்டு கண்மூடித்தனமாக தாக்கினர்.

இந்த கோர தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை உலக நாடுகள் வன்மையாக கண்டித்தன. தாக்குதலில் ஈடுபட்ட பாக். ஆதரவு பெற்ற லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. 

ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடைய பயங்கரவாத இயக்கமான ஜமாத் உத் தவாவிற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. ஹபீஸ் சயீத் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்கப்பட்டான். அவன் இப்போது பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருக்கிறான்.

இதற்கிடையே, ஹபீஸ் சயீத் தரப்பில் தன்னை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. லாகூர் சட்ட நிறுவனம் தரப்பில் ஐ.நா.வை நாடினான். ஆனால், அந்த கோரிக்கையை ஐ.நா. நிராகரித்தது.

இந்நிலையில், மும்பை ஓட்டல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையதை விசாரிக்கச் செல்லும் ஐ.நா. அதிகாரிகளுக்கு விசா தர பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் ஐக்கிய நாடுகள் அதிகாரிகளுக்கான விசாவை மறுத்துள்ளது. #HafizSaeed #PakistanblocksUNteam
Tags:    

Similar News