செய்திகள்
கோப்புப்படம்

நைஜீரியாவில் போக்கோஹரம் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு 13 ராணுவ வீரர்கள் பலி

Published On 2018-12-26 14:49 GMT   |   Update On 2018-12-26 14:49 GMT
நைஜீரியா நாட்டின் போர்னோ மாநிலத்தில் ராணுவ முகாம் மீது போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். #Nigeriantroops #BokoHaram #BokoHaramattack
நைஜர்:

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். இதுதவிர, ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து அதிரடி தாக்குதல்களும் நடத்துகின்றனர். 9 ஆண்டுகளாக இவர்கள் ஆடிவரும் வெறியாட்டத்துக்கு சுமார் 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உயிருக்கு பயந்து சுமார் 20 லட்சம் மக்கள் தங்களது வசிப்படங்களை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில், நாட்டின் வடகிழக்கில் உள்ள போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி பகுதியை யோபே மாநிலத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலை வழியாக கடந்த  திங்கட்கிழமை மாலை சில ராணுவ வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன.

அப்போது, அந்த வாகன அணிவகுப்பை வழிமறித்த பயங்கரவாதிகள் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் சுமார் ஒருமணி நேரம் நீடித்த இந்த மோதலில் 13 ராணுவ வீரர்களும் ஒரு போலீஸ்காரரும் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், 18 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Nigeriantroops #BokoHaram #BokoHaramattack 
Tags:    

Similar News