செய்திகள்

அமெரிக்க கார்கள் மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை ரத்து செய்ய சீனா சம்மதம்

Published On 2018-12-03 06:10 GMT   |   Update On 2018-12-03 06:10 GMT
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை குறைக்கவும், ரத்து செய்யவும் சீன அரசு சம்மதித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Chinatariffs #UStariffs #ChinaUStariffs
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரியையும், பிறநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் பலமடங்காக உயர்த்தி உத்தரவிட்டார்.
 
இந்த உத்தரவால் சீனா- அமெரிக்கா இடையில் வரிவிதிப்பு வர்த்தகப் போர் மூண்டது. சீனாவும் அமெரிக்கா மீது ஏராளமான வரிகளை அறிவித்தது. இதற்கு பதிலடியாக சீனா மீது பல்வேறு பொருட்கள் மீது சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான வரிகளை டிரம்ப் சமீபத்தில் சுமத்தினார்.

இந்த வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.

சமீபத்தில் அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது சீன அதிபர் க்சி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகவும், இருநாட்டு தலைவர்களும் வரிகளை தளர்த்த சம்மதம் தெரிவித்ததாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அமெரிக்கா, சீனா இடையிலான திருத்தப்பட்ட புதிய வரிவிதிப்பு கொள்கையை இறுதிசெய்ய மூன்று மாத (கருணை) கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது.



இந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யவும், குறைக்கவும் சீன அரசு சம்மதித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க கார்களுக்கு முன்னர் சீனா 40 சதவீதம் வரி விதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Chinatariffs  #UStariffs  #ChinaUStariffs  
Tags:    

Similar News