செய்திகள்

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு- பிரான்சில் 3 லட்சம் பேர் போராட்டம்

Published On 2018-11-19 05:47 GMT   |   Update On 2018-11-19 05:47 GMT
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு பிரான்சில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். #FrenchRevolution
பாரீஸ்:

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மீண்டும் அதிகரிப்பதால் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அதிபர் இம்மானுவல் மெக்ரான் அறிவித்தார்.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வெகுண்டெழுந்த மக்கள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2034 இடங்களில் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. அதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகளை மறித்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். ரோட்டில் கற்கள், மரங்கள் போன்றவற்றை போட்டு இருந்தனர். ஆங்காங்கே டயர்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை சம்பவங்களில் 409 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 28 பேர் போலீசார், எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு படையினரும் அடங்குவர்.

போராட்டத்தின்போது வன்முறை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்தவர்களில் 14 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

157 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை பிரான்ஸ் உள்துறை மந்திரி கிறிஸ்டோப் கேஸ்டனர் தெரிவித்தார்.

இப்போராட்டத்தின் காரணமாக அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் செல்வாக்கு 25 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு பத்திரிகை பொதுமக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. அப்போது கடந்த மாதத்தை விட தற்போது மெக்ரானின் மக்கள் செல்வாக்கு மிகவும் குறைந்து இருப்பது தெரியவந்தது. #FrenchRevolution
Tags:    

Similar News