செய்திகள்

மெக்சிகோவை தாக்கியது வில்லா புயல் - சூறாவளி காற்றுடன் கனமழை நீடிப்பு

Published On 2018-10-24 04:10 GMT   |   Update On 2018-10-24 04:10 GMT
மெக்சிகோவை மிரட்டிய வில்லா புயல் வலுவடைந்து கரை கடந்ததையடுத்து, கடற்கரை நகரங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. #HurricaneWilla #Mexico
மெக்சிகோ சிட்டி:

பசிபிக் கடலில் நிலைகொண்ட வில்லா புயல், மேலும் வலுவடைந்து மெக்சிகோவை நோக்கி முன்னேறியது. நேற்று அதிதீவிர புயலாக மாறி மெக்சிகோவின் மேற்கு பகுதியை தாக்கியது. சினலோவா மாநிலம் ஐஸ்லா டெல் போஸ்க் பகுதியில் புயல் கரை கடந்ததையடுத்து மணிக்கு 195 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது.

புயல் தாக்கியதால் மெக்சிகோவின் பசிபிக் கடற்கரை நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது புயல் வலுவிழக்கத் தொடங்கினாலும், தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



வில்லா புயல் வலுப்பெற்று மெக்சிகோவை தாக்கி, பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தலாம், பெரிய அளவில் மண் சரிவை ஏற்படுத்தலாம் என ஏற்கெனவே வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாத துவக்கத்தில் அமெரிக்காவை தாக்கிய மைக்கேல் புயல், பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. புயல், மழை தொடர்பான விபத்துகளில் 27 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #HurricaneWilla #Mexico
Tags:    

Similar News