செய்திகள்

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது - துருக்கி அரசு குற்றச்சாட்டு

Published On 2018-10-23 00:37 GMT   |   Update On 2018-10-23 00:37 GMT
சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமாக திட்டமிடப்பட்ட செயல் என துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது. #JamalKhashoggi
இஸ்தான்புல்:

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணை தூதரகம் சென்று விசாரித்தனர்.

இதற்கிடையே, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா உறுதி செய்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.



இந்நிலையில், சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமாக திட்டமிடப்பட்ட செயல் என துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, துருக்கி நாட்டின் ஆளும் கட்சியான நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி செய்தித் தொடர்பாளர் ஒமர் செலீக் அங்காராவில் கூறுகையில், இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குச் சென்ற பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமான முறையில் முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட செயல்.

அந்த உண்மையை மூடி மறைப்பதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தை வெறும் யூகமாகவே வைத்திருக்க துருக்கியால் முடியாது. கசோக்கி படுகொலை விவகாரத்தில் சவுதி அரேபியாவுடன் நாங்கள் சமரசம் செய்து கொண்டால், அது நீதிக்குப் புறம்பானது என் தெரிவித்தார். #JamalKhashoggi
Tags:    

Similar News