செய்திகள்

70-வது ஆண்டு விழாவையொட்டி வடகொரியாவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு

Published On 2018-09-09 18:52 GMT   |   Update On 2018-09-09 18:52 GMT
வட கொரியாவின் 70-வது ஆண்டு விழாவையொட்டி, பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடந்தது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. #NorthKorea #70YearsCelebrate
பியாங்யாங்:

வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9-ந் தேதி பிரமாண்டமாக நடைபெறும். அதையொட்டி நடக்கிற ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். ராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும்.



இந்த ஆண்டு, 70-வது ஆண்டு விழா, வடகொரியாவில் எப்படி அமையப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு காரணம், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில், இரு துருவங்களாக கருதப்பட்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசியபோது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரியா ஒப்புக்கொண்டது. இதையொட்டி இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தினர்.



அந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடுவது தொடர்பாக கூடுதலான தகவல்கள் இல்லை. இருப்பினும், அதன் பின்னர் வடகொரியா இதுவரையில் அணுகுண்டு வெடிக்கவும் இல்லை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தவும் இல்லை.



அதே நேரத்தில் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான அந்த நாட்டின் நடவடிக்கையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் எதிரொலியாகத்தான் சமீபத்தில் அந்த நாட்டுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்தார்.



இந்த நிலையில்தான், வடகொரியாவில் நேற்று நடந்த 70-வது ஆண்டு விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த விழாவையொட்டிய பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு எப்படி நடைபெறப்போகிறது, வடகொரியா தனது ஆயுத பலத்தை காட்டுமா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடம் பெறச்செய்யுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.



இந்த நிலையில் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு விழா தொடங்கியது. ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு வீர நடை போட்டனர்.

அதே நேரத்தில் அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தன.



அணிவகுப்பை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், சீன அதிபர் ஜின்பிங்கின் சிறப்புத்தூதர், லி ஜான்சுவுடன் பார்வையிட்டார்.

இந்த விழாவில் கிம் ஜாங் அன் உரை ஆற்றவில்லை. அவரது வலதுகரமாக கருதப்படுகிற கிம் யோங் நாம் உரை ஆற்றினார். அவரது பேச்சில் வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் பற்றி எதுவும் இடம் பெறவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவதுதான் முக்கிய அம்சமாக இடம் பெற்று இருந்தது.



இந்த அணிவகுப்பை சீனா, ரஷியா, கியூபா நாடுகளின் உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்களும் பார்வையிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ராணுவ அணுவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறாதது அமெரிக்காவுக்கு நிம்மதியை அளிப்பதாக அமைந்தது.



அது மட்டுமின்றி, அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதிப்படி கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக வடகொரியா ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் உலக அரங்கில் உருவாகி உள்ளது.   #NorthKorea #70YearsCelebrate
Tags:    

Similar News