செய்திகள்

நவாஸ் செரீப் தம்பி உள்பட 1500 பேர் மீது பயங்கரவாத வழக்கு

Published On 2018-07-15 10:00 GMT   |   Update On 2018-07-15 10:00 GMT
நவாஸ் செரீப் தம்பி உள்பட 1500 பேர் மீது போலீசார் பயங்கரவாத வழக்கு பதிவு செய்துள்ளனர். #NawazSharif

லாகூர்:

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 10 ஆண்டும், அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டும் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் லண்டனில் இருந்து நேற்று முன்தினம் திரும்பிய இவர்கள் இருவரும் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக லண்டனில் இருந்து திரும்பும் அவர்களை வரவேற்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் லாகூர் விமான நிலையத்துக்கு பேரணியாக செல்ல தயார் நிலையில் இருந்தனர். ஆனால் லாகூர் நகரம் முழுவதையும் போலீசார் சீல் வைத்தனர்.

144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் குவிந்து லாகூர் விமான நிலையம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை அங்கு திரண்டு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நவாஸ்செரீப் கட்சி தொண்டர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைத்தும் எரிக்கப்பட்டது.

இது தொடர்பாக நவாஸ் செரீப் கட்சி தொண்டர்கள் 1,500 பேர் மீது போலீசார் தீவிரவாத வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் நவாஸ் செரீப் தம்பியும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான ஷாபாஸ் செரீப் மற்றும் முன்னாள் பிரதமர் ஷாகித் ஷாகித்கான் அப்பாசி உள்பட 20 தலைவர்களும் அடங்குவர்.

நவாஸ் செரீப் தம்பி ஷாபாஸ் செரீப் கட்சி தலைவராகவும் இருக்கிறார். இவர் தலைமையில் தான் வரவேற்பு பேரணி நடைபெற்றது.

Tags:    

Similar News