செய்திகள்
நிதின் - காமாட்சி கிருஷ்ணன்

கேரளாவில் உறவினரின் உடலுக்காக காத்திருந்தவர்களுக்கு வந்து சேர்ந்த தமிழக நபரின் பிரேதம்

Published On 2018-07-14 15:04 GMT   |   Update On 2018-07-14 15:23 GMT
ஐக்கிய அரபு அமீரகத்தில் அகால மரணம் அடைந்தவரின் பிரேதத்துக்காக கேரளாவில் காத்திருந்த உறவினர்கள் விமானத்தில் வந்து சேர்ந்த வேறொருவரின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். #deadKeralaman #bodyofanotherperson
துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிவந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நிதின் ஒத்தயோத் கோட்டரோன்(29) என்பவர் கடந்த 5-ம் தேதி அகால மரணம் அடைந்தார்.

வளைகுடா நாடுகளின் வழக்கப்படி, பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பதப்படுத்தப்பட்ட நிதின் உடலை விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நிதினின் உடலை பெற்றுகொள்ள சுமார் ஒருவாரம் காத்திருந்த உறவினர்கள், விமானத்தில் வந்துசேர்ந்த பிரேதத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று நிதின் உடலை கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்றியனுப்பிய அதேவேளையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி கடந்த 7-ம் தேதி அங்கு மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த காமாட்சி கிருஷ்ணன்(39) என்பவரது உடலும் ஏர் எத்திஹாத் விமானம் மூலம் அபுதாபியில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், சென்னை வந்துசேர வேண்டிய கிருஷ்ணனின் பிரேதம் கேரளாவில் நிதினின் பிரேதத்துக்காக காத்திருந்த உறவினர்களுக்கு தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது.

இருவரின் உடல்களையும் பதப்படுத்தும் மையத்தில் இந்த குளறுபடி நடந்திருப்பதாக கருதப்படும் நிலையில், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பதாகவும் தேவையான உதவிகளை செய்வதாகவும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த காமாட்சி கிருஷ்ணனின் பிரேதம் தற்போது கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. #deadKeralaman #bodyofanotherperson
Tags:    

Similar News