செய்திகள்

சிங்கப்பூர் சென்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் கிம் ஜாங் அன் - டிரம்ப் சந்திப்பு : வெள்ளை மாளிகை அறிவிப்பு

Published On 2018-06-05 18:15 GMT   |   Update On 2018-06-05 18:15 GMT
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரின் சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
வாஷிங்டன்:

வட கொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

திட்டமிட்டபடி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இதையடுத்து, அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. 12-ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



இதற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள ஷாங்ரி-லா ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என சிங்கப்பூர் அரசின் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இந்த சந்திப்புக்கு உறுதுணையாக உள்ள சிங்கப்பூர் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
Tags:    

Similar News