செய்திகள்

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?

Published On 2018-05-20 03:28 GMT   |   Update On 2018-05-20 03:28 GMT
ரஷியாவின் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் எரிபொருளை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. #Russia #FloatingNuclearPowerStation
மாஸ்கோ:

ஒரு சரக்கு கப்பலை போல தோற்றமளிக்கும் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷியா உருவாக்கியது. இந்த மிதக்கும் அணுமின் நிலையம் கடந்த மாதம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், நேற்று முர்மன்ஸ்க் நகரில் எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது.

இந்திய மதிப்பில் 654 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையம் 144 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்டது. முழுவதும் பனி படர்ந்த ஆர்டிக் வளைவில் உள்ள பெவெக் என்ற நகருக்கு அடுத்தண்டு இறுதிக்குள் இந்த மிதக்கும் அணுமின் நிலையம் சென்றடையும். அங்குள்ள ஊர்களுக்கு இதன் மூலம் மின்சாரம் அளிக்கப்பட உள்ளது.



மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளுக்கும் இதன் மூலம் மின்சாரம் கிடைக்கும். இது செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் ரஷியாவில் ஏற்கனவே இருக்கும் இரண்டு பழைய மின் நிலையங்களை மூட அரசு திட்டமிட்டுள்ளது. செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை நினைவு கூர்ந்து இந்த மிதக்கும் அணுமின் நிலையத்திற்கும் பலர் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.

சர்வதேச விதிமுறைகளின் படி அணுமின் நிலையம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சுனாமி போன்ற இயற்கை பேரிடரை இது தாங்கும் என கப்பலை தயாரித்த ரஷிய அரசு நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது. மிதக்கும் கப்பல் என்றாலும், இதன் உள்ளே கப்பலுக்கு உண்டான எந்த பாகங்களும் கிடையாது. இழுவைகள் மூலமே இந்த மிதக்கும் அணுமின் நிலையம் இழுத்துச் செல்லப்பட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News