செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஆண் போல் மாறு வேடமிட்டு வாழும் 18 வயது இளம்பெண்

Published On 2018-04-24 09:07 GMT   |   Update On 2018-04-24 09:07 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் சில இடங்களுக்கு வேலைக்கு செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகளுக்கு பயந்து 18 வயது இளம்பெண் ஒருவர் ஆண் வேடமிட்டு வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. #SitaraWafadar #Afghanistan
காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் பழமை வாதம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு செயல்படும் தலிபான் தீவிரவாதிகள் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

பெண்கள் பள்ளிக்கு செல்ல கூடாது, குறிப்பிட்ட வயதுக்கு மேல் சில இடங்களுக்கு வேலைக்கு செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகளை அவர்கள் வகுத்துள்ளனர்.

இதற்கு பயந்து 18 வயது இளம்பெண் ஒருவர் ஆண் வேடமிட்டு வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அவரது பெயர் சீதாரா வபாதார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆண் குழந்தை இல்லாத தம்பதிகள் தங்கள் பெண் குழந்தைகளில் ஒருவரை ஆண் போல் உடை அணிந்து மகன் போலவே வளர்ப்பது வழக்கம்.

ஆனால், அந்த குழந்தை பெரியவள் ஆகி பருவம் அடைந்ததும் ஆண் வேடத்தை மாற்றி முழுமையான பெண்ணாக வாழ்வது வழக்கம்.

இதேபோல் சீதாரா வபாதார் வீட்டில் பெற்றோருக்கு மொத்தம் 6 குழந்தைகள். 6 பேருமே பெண்களாக பிறந்தனர். ஆண் குழந்தை இல்லையே? என்ற ஏக்கத்தில் சீதாரா வபாதாரை ஆண் குழந்தை போல் ஆடை அணிந்து வளர்த்தனர்.

இவருடைய தந்தை அங்குள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சீதாரா வபாதாருக்கு 8 வயது ஆன போது அவளும் தந்தையுடன் சென்று செங்கல் சூளையில் வேலை பார்த்தார்.

பெண் பருவம் அடைந்து விட்டால் அவள் செங்கல் சூளையில் வேலை பார்க்க கூடாது என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எனவே, சீதாரா வபாதார் பருவம் அடைந்த பிறகும் தனது ஆண் வேடத்தை கலைத்துவிட்டு பெண்ணாக மாறவில்லை. செங்கல் சூளைக்கு தொடர்ந்து வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ஆண் போலவே தொடர்ந்து வாழ முடிவு செய்தார்.

தற்போது 18 வயது ஆகிவிட்ட நிலையிலும் ஆண் வேடத்திலேயே வாழ்ந்து வரும் அவர் செங்கல் சூளைக்கு சென்று பணியாற்றி வருகிறார்.

இது சம்பந்தமாக சீதாரா வபாதார் கூறும் போது, நான் என்னை ஒரு போதும் பெண்ணாக கருதியது இல்லை. சிறு வயதில் இருந்தே ஆணாகவே வளர்ந்து விட்டதால் நானும் ஆண் என்ற எண்ணமே எனக்கு இருக்கிறது.

நான் இதற்காக வெட்கப்படுவது இல்லை. என் வயதுள்ள மற்ற இளம் பெண்கள் என்னிடம், நீ பருவம் அடைந்து விட்டாய். இனியும் செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்ல கூடாது என்று கூறுகின்றனர்.

ஆனால், நான் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் நிலை உள்ளது. தினமும் 500 செங்கல்களை தயாரிப்பேன். அதன் மூலம் 160 ஆப்கானி பணம் (இந்திய பண மதிப்புபடி 130 ரூபாய்) கிடைக்கும். வேலைக்கு செல்லவில்லை என்றால் இந்த பணத்தை இழக்க வேண்டி இருக்கும். எனவேதான் ஆண் வேடமிட்டு வேலைக்கு செல்கிறேன் என்றார்.

சீதாரா வபாதாரின் தந்தை கூறும்போது, எனக்கு இறைவன் ஆண் குழந்தையை தரவில்லை. எனவே, எனது மகளை ஆண் போல் வளர்த்தோம். இப்போதும் அப்படியே வாழ ஆசைப்படுகிறாள். எனவே, அவளது போக்குக்கு விட்டு விட்டோம் என்று கூறினார்.

இவளுக்கு 13 வயதில் ஒரு தங்கை இருக்கிறாள். அவளையும் ஆண் போலவே அந்த வீட்டில் வளர்த்து வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News