செய்திகள்

நிகரகுவாவில் போராட்டத்தின்போது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

Published On 2018-04-22 19:24 GMT   |   Update On 2018-04-22 19:24 GMT
தெற்கு கரீப்பியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தின்போது ஏஞ்சல் கஹோனா என்ற பத்திரிகையாளர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
மனகுவா:

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில், ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது.

போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் பலர் பலியாகி உள்ளனர். சுமார் 25 பேர் பலியாகி உள்ளதாக உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

இந்த நிலையில், அங்கு தெற்கு கரீப்பியன் கடற்கரை பகுதியில் ஏஞ்சல் கஹோனா என்ற பத்திரிகையாளர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். அவர் தனது செல்போனை கொண்டு சேதம் அடைந்த பண எந்திரம் ஒன்றை படம் பிடித்து கொண்டு இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரை சுட்டது யார் என உடனடியாக தெரிய வரவில்லை.

அதே நேரத்தில் போராட்டக்காரர்களும், போலீசாரும் மட்டுமே ஆயுதங்கள் வைத்திருந்ததாக பத்திரிகையாளர் ஒருவரை மேற்கோள்காட்டி நிகரகுவா ஊடகங்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 
Tags:    

Similar News