செய்திகள்

ஆப்கனில் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 31 பேர் பலி

Published On 2018-04-22 07:32 GMT   |   Update On 2018-04-22 08:58 GMT
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி இன்று நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். #KabulAttack
காபுல்:

பல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், காபுல் நகரின் தாஷ்-இ பார்சி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த வாக்காளர் பதிவு மையத்தில் இன்று நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி, தான் கொண்டு வந்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தான். இந்த தாக்குதலில் தற்போது வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோல, பக்லான் என்ற பகுதியில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

இரண்டு விபத்துகளிலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. #KabulAttack
Tags:    

Similar News