செய்திகள்

தலீபான், ஹக்கானி பயங்கரவாதிகளின் சொர்க்கபுரி பாகிஸ்தான் - அமெரிக்க ராணுவ தளபதி குற்றச்சாட்டு

Published On 2018-04-14 01:11 GMT   |   Update On 2018-04-14 01:11 GMT
தலீபான், ஹக்கானி பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ராணுவ தளபதி மார்க் மில்லே கூறியுள்ளார்.
வாஷிங்டன்:

உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் இருக்கிறது. ஆனால் பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் அந்த நாடு உறுதிபட எடுப்பதில்லை என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக அமைந்து உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற குழு முன்பாக அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் மார்க் மில்லே பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, “ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு மற்றொரு நாடு சொர்க்க புரியாக திகழ்கிறபோது அந்த பயங்கரவாத இயக்கத்தை ஒடுக்குவது என்பது மிக மிக கடினமான காரியம். அந்த வகையில், இப்போது பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகள், தலீபான் மற்றும் ஹக்கானி வலைச்சமூக பயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்ந்து வருகின்றன” என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “பயங்கரவாதிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், அதற்கு பாகிஸ்தானும் உதவ வேண்டும். இது மிக முக்கியம். இந்த தீர்வில் பாகிஸ்தானும் ஒரு அங்கம். இது பிராந்திய ரீதியிலான பிரச்சினை ஆகும். இதை பாகிஸ்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News