செய்திகள்

மியான்மரில் வன்முறையை தூண்டும் காரணியாக பேஸ்புக் இருந்ததா? மார்க் ஜுக்கர்பர்க் பதில்

Published On 2018-04-11 13:15 GMT   |   Update On 2018-04-11 13:15 GMT
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறை அதிகரித்ததற்கு பேஸ்புக் ஒரு காரணியாக இருந்ததாக எழுந்த புகாரில் அமெரிக்க நாடாளுமன்ற குழுவில் மார்க் ஜுக்கர்பர்க் விளக்கமளித்துள்ளார்.
வாஷிங்டன்:

மியான்மரில் ராணுவ அடக்குமுறையால் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிர்தப்பி வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். சர்வதேச நாடுகளின் கண்டனத்தை தொடர்ந்து அகதிகளை திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் மியான்மர் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மியான்மரில் வன்முறை உச்சகட்டத்தில் இருந்தபோது, சமூக ஊடகமான பேஸ்புக்கில் இது தொடர்பாக பல போலி தகவல்கள் பரப்பப்பட்டன. சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் ஆயிரக்கணக்கானவை பதிவிடப்பட்டன. வன்முறை மிகப்பெரிய அளவில் பரவியதற்கு இதுவும் ஒரு காரணி என கூறப்பட்டது.



குறிப்பாக முஸ்லிம் பத்திரிக்கையாளர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பேஸ்புக் செய்திகளே காரணம் என ஐ.நா ஆய்வுக்குழு அறிக்கை அளித்திருந்தது. இந்நிலையில், கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா விவகாரம் தொடர்பாக பேஸ்புக் அதிபர் மார்க் ஜுக்கர்பர்க் அமெரிக்க நாடாளுமன்ற குழுவில் ஆஜராகி நேற்று விளக்கமளித்தார்.

அப்போது, மியான்மர் விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “பர்மீஸ் மொழி தெரிந்த பலரை இதற்காக பணியமர்த்த உள்ளோம். உள்ளூர் மொழி பேசும் மக்களின் உதவி இல்லாமல் செய்திகளை கண்டறிவது கடினமாக உள்ளது. நமது முயற்சியால் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்” என மார்க் ஜுக்கர்பர்க் கூறியுள்ளார்.

மேலும், “இது போன்ற வெறுப்பு பேச்சுகளை பதிவிடுபவர்களை கண்டறிந்து அவர்களின் கணக்குகளை நீக்கும் பணிகளையும் நீக்கி வருகிறோம்” எனவும் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார். #TamilNews
Tags:    

Similar News