செய்திகள்

கனடாவின் 4 தூதரக அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்றியது ரஷ்யா

Published On 2018-03-30 17:14 GMT   |   Update On 2018-03-30 17:14 GMT
ரஷ்யாவில் உள்ள கனடா தூதரங்களில் பணியாற்றி வந்த 4 அதிகாரிகளை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு ரஷ்யா அரசு உத்தரவிட்டுள்ளது. #spypoisoning #Russia #expelUSdiplomats
ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உளவுத்துறை அதிகாரி மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றியது தொடர்பாக பல நாடுகள் ரஷியாவை கண்டித்து அந்நாட்டு தூதர்களை திரும்ப அனுப்பியுள்ளது. கனடாவும் அந்நாட்டில் பணியாற்றிவந்த 7 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில், கனடாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றிவரும் 4 அதிகாரிகளை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரங்களில் பணியாற்றிவரும் 60 அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற ரஷ்ய அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #spypoisoning #Russia #expelCanadiandiplomats #tamilnews
Tags:    

Similar News