செய்திகள்

மோசமடையும் பருவநிலை - ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்கள் உயிரிழப்பு

Published On 2018-03-24 04:28 GMT   |   Update On 2018-03-24 04:28 GMT
ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய சுமார் 150 திமிங்கலங்கள் மோசமான வானிலை காரணமாக பரிதாபமாக உயிரிழந்தன.
கான்பெரா:

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் ஏராளமான திமிங்கலங்கள் வியாழக்கிழமை இரவு கரை ஒதுங்கின. மறுநாள் காலையில் இதனைக் கவனித்த உள்ளூர் மீனவர் ஒருவர், இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு அதிகாரிகளுடன் வனவிலங்கு பாதுகாப்பு படையினர், தன்னார்வலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்தனர்.

அப்போது, சுமார் 150 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன. அவற்றை காப்பாற்றி மீண்டும் ஆழ்கடலுக்குள் அனுப்ப தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், பாறைகள் அதிகம் கொண்ட அந்த கடற்கரையில் இருந்து அதிக எடை கொண்ட திமிங்கலங்களை ஆழ்கடல் பகுதிக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

நேரம் செல்லச்செல்ல திமிங்கலங்கள் ஒவ்வொன்றாக உயிரிழக்க ஆரம்பித்தன. மோசமான வானிலை காரணமாக நேற்று இரவுக்குள் பெரும்பாலான திமிங்கலங்கள் இறந்துவிட்டன. 6 திமிங்கலங்கள் மட்டுமே உயிர்பிழைத்தன. பாறை மிகுந்த கடற்கரை, சுற்றிலும் உயிரிழந்த திமிங்கலங்கள், மோசமான கடல்அலைகளுக்கு மத்தியில் உயிர் பிழைத்த திமிங்கலங்களை கடுமையான முயற்சிக்குப் பிறகு கடலுக்குள் அனுப்பி வைத்தனர்.



வியாழக்கிழமை ஒரே இரவில் அவ்வளவு திமிங்கலங்களும் கரை ஒதுங்கியதால், அவை துரதிர்ஷ்டவசமாக பிழைக்கவில்லை என பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் சேவை செய்தித் தொடர்பாளர் ஜெரெமி சிக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இதுபோன்று அடிக்கடி திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்குகின்றன. இதற்கான காரணங்கள் என்ன என்று விஞ்ஞானிகளுக்கு தெரிய வரவில்லை. உடல்நிலை சரியில்லை என்றாலோ, காயமடைந்தாலோ அல்லது தவறான வழியில் சென்றாலோதான் இப்படி கரை ஒதுங்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். #tamilnews
Tags:    

Similar News