செய்திகள்

பயங்கரவாதி என அறிவித்ததை எதிர்த்து ஹபீஸ் சயீத் கோர்ட்டில் வழக்கு

Published On 2018-03-10 20:29 GMT   |   Update On 2018-03-10 20:29 GMT
பயங்கரவாதி என அறிவித்ததை எதிர்த்து, ஹபீஸ் சயீத் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார். அதன்பேரில், பாகிஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
இஸ்லாமாபாத்:

பயங்கரவாதி என அறிவித்ததை எதிர்த்து, ஹபீஸ் சயீத் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார். அதன்பேரில், பாகிஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய பயங்கரவாத அமைப்புகளை நிறுவியவர் ஆவார். மும்பையில், 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நடத்திய கொடூர தாக்குதல்களை மூளையாக இருந்து நடத்தியதும் இவர்தான்.

அந்த தாக்குதல்களில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. அத்துடன், அவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலை வைத்தது. அமெரிக்காவின் தொடர் அழுத்தம் காரணமாக அவரை வீட்டுக்காவலில் வைத்த பாகிஸ்தான் அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுவித்தது.

ஆனால் அமெரிக்கா விடவில்லை. ஹபீஸ் சயீத்தை கைது செய்தே ஆக வேண்டும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை நிர்ப்பந்தித்தது. முதலில் அதற்கு பாகிஸ்தான் அரசு அடிபணிய மறுத்தது. பின்னர் ஒரு வழியாக அடி பணிந்தது. கடந்த மாதம், அவரை பயங்கரவாதி என அறிவித்தது.

இதற்காக, அந்த நாட்டில் 1997-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டம் திருத்தப்பட்டது. அதற்கான அவசர சட்டத்துக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி மம்னூன் உசேன் ஒப்புதலும் வழங்கினார். இந்த அவசர சட்டமானது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட நபர்களையும், இயக்கங்களையும் தடை செய்ய வழி வகை செய்து உள்ளது.

மேலும், ஹபீஸ் சயீத் இயக்கங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ராவல்பிண்டி, ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில், ஹபீஸ் சயீத் இயக்கங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன.

இந்த நிலையில், தன்னை பயங்கரவாதி என அறிவிக்க வகை செய்து ஜனாதிபதி பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து ஹபீஸ் சயீத், இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கில் அவர் தான் 2002-ம் ஆண்டு, ஜமாத் உத் தவாவை தொடங்கியதாகவும், லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இந்தியாவின் அழுத்தம் காரணமாகத்தான், தான் 2009, 2017 ஆண்டுகளில் அரசால் கைது செய்யப்பட்டு இருந்ததாக கூறி உள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்துதான், தனது ஜமாத் உத் தவா இயக்கத்தை பாகிஸ்தான் அரசு கண்காணிப்பு வளையத்தில் வைத்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இறையாண்மை கொண்ட நாடு பாகிஸ்தான், அப்படி இருக்கிறபோது, இத்தகைய அவசர சட்டம், இறையாண்மையை பாதிக்கிறது என்றும் கூறி உள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனத்தை மீறிய எந்த ஒரு சட்டத்தையும் செல்லாது என அறிவிக்க முடியும், அதற்கு அரசியல் சாசனத்தின் பிரிவு 199 வகை செய்து உள்ளது எனவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த வழக்கை நீதிபதி அமீர் பரூக் விசாரணைக்கு ஏற்றார்.

இது குறித்து பதில் அளிப்பதற்கு ஜனாதிபதியின் முதன்மை செயலாளருக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். 
Tags:    

Similar News