செய்திகள்

ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பாராட்டு

Published On 2018-02-23 20:58 GMT   |   Update On 2018-02-23 20:58 GMT
வரும் மே மாதம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்புக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம்:

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது. இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் இருந்து அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. எனினும், ஜெருசலேம் நகரம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட நகராகவே கருதப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவித்தார்.

இதற்கிடையே, வரும் மே மாதம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் செயல்பட தொடங்கும் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வரும் மே மாதம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்புக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் செயல்பட தொடங்கும் நாள் இஸ்ரேல் மக்களுக்கு சிறப்பான நாள். இந்த அறிவிப்பு இஸ்ரேலின் 70-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News