செய்திகள்

எங்கள் நாட்டு உள்விவகாரத்தில் தலையிடுவதா? - இந்தியா மீது மாலத்தீவு பாய்ச்சல்

Published On 2018-02-23 13:40 GMT   |   Update On 2018-02-23 13:40 GMT
நெருக்கடி நிலை நீட்டிப்பு விவகாரத்தில் தங்கள் நாட்டில் உள்ள உண்மையான களநிலவரம் தெரியாமல் இந்தியா கருத்து தெரிவித்துள்ளதாக மாலத்தீவு அரசு குற்றம்சாட்டியுள்ளது.
மாலே:

மாலத்தீவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்றும் சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால், தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என்பதால், நீதிமன்ற உத்தரவை ஏற்க அதிபர் அப்துல்லா யாமீன் மறுத்து விட்டார்.

இதனால், அவரை பதவி நீக்கும் நடவடிக்கையில் தலைமை நீதிபதி இறங்கினார். இதனை அடுத்து, கடந்த 5-ம் தேதி மாலத்தீவில் 15 நாட்கள் அவசரநிலை பிரகடனம் செய்து அதிபர் உத்தரவிட்டார். ஊழல் குற்றச்சாட்டில் தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவுடன் அவசர நிலைக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், அதனை நீட்டிக்க பாராளுமன்றத்திடம் அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார்.

நெருக்கடி நிலையை நீட்டிக்க பாராளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்ததால் மேலும் 30 நாட்கள் நெருக்கடி நிலை அமலில் இருக்கும் என அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்தார்.

மாலத்தீவில் நெருக்கடி நிலையை நீட்டிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது குறித்து இந்தியா நேற்று அதிருப்தி தெரிவித்திருந்தது. நெருக்கடி நிலையை மேலும் ஒருமாத காலம் நீட்டிக்கும் அளவுக்கான அவசிய சூழல் மாலத்தீவில் ஏற்படவில்லை என்றும் இந்தியா குறிப்பிட்டிருந்தது.



இந்நிலையில், மாலத்தீவில் உள்ள உண்மையான களநிலவரம் தெரியாமல் கருத்து தெரிவித்துள்ளதாக இந்தியாமீது மாலத்தீவு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மைகளையும் களநிலவரங்களையும், தங்கள் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தையும் பிறக்கணித்துவிட்டு இந்தியா அறிக்கை வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலத்தீவு நாட்டின் வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தை நாங்கள் சந்தித்து வருகிறோம் என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை. எனவே, இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படுவதை இந்தியா உள்ளிட்ட நட்புநாடுகள் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து பணியாற்றவும், அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News