செய்திகள்

சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு

Published On 2018-02-13 07:15 GMT   |   Update On 2018-02-13 08:21 GMT
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை தனியார்மயமாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.#nasa
வாஷிங்டன்:

கோள்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் சர்வதேச ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. இது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து அவற்றை உருவாக்கி உள்ளன. அங்கு பணியில் ஈடுபட வெளிநாட்டு விண்வெளி வீரர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்க அதிபராக ஜார்ஜ் டபிள்யூ புஷ் இருந்தபோது கடந்த 2001-ம் ஆண்டில் அதன் கட்டுமான பணிகள் தொடங்கின. ஆய்வகத்துக்காக அமெரிக்கா இதுவரை ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடி அதாவது 100 பில்லியன் டாலர் செலவழித்து உள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு 2018-2019-ம் ஆண்டில் செலவிட ரூ.975 கோடியை (150 மில்லியன் டாலர்) பட்ஜெட்டில் டிரம்ப் அரசு ஒதுக்கியுள்ளது. 2025-ம் ஆண்டு வரை விண்வெளி ஆய்வக பணி நடைபெற உள்ளது.

இந்நிலையில், விண்வெளி ஆய்வகத்தை தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்காக பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.

இதன்மூலம் விண்வெளி ஆய்வகத்தை வர்த்தக ரீதியில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்கான பணியை வெள்ளை மாளிகை தொடங்கிவிட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இதனால் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்குமா? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இது குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என நாசா தெரிவித்துள்ளது. #nasa #tamilnews

Tags:    

Similar News