செய்திகள்

பதவியேற்ற ஓராண்டிலேயே நிர்வாகம் ஸ்தம்பிப்பு: டிரம்ப்பை கலாய்த்த நெட்டிசன்கள்

Published On 2018-01-21 02:15 GMT   |   Update On 2018-01-21 02:15 GMT
அமெரிக்க அதிபராக பதவியேற்று ஓராண்டுகளை நிறைவு செய்துள்ள டொனால்ட் டிரம்ப், அரசு அலுவல்கள் முடங்கியுள்ள நிலையில், இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.
வாஷிங்டன்:

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்று ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளன. அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறாததால், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய இந்த மசோதா, செனட் சபையில் 60 வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில், 49 வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிர்த்து வாக்களித்தனர்.

எல்லை பாதுகாப்பு மற்றும் மெக்சிகோ சுவருக்கு நிதி, சிறுவயதில் குடியேறியவர்களுக்கு பாதுகாப்பு ஆகியவை அந்த ஐந்து எம்.பி.க்களின் கோரிக்கைகளாக உள்ளது.

செலவின மசோதாவை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சி (ஜனநாயக கட்சி) அரசியல் நாடகம் நடத்துவதாக குடியரசு கட்சியின் செனட் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மசோதா நிறைவேற்றுவதற்கான இன்று ஞாயிறு அன்று செனட் சபை செயல்படும் என கூறியுள்ளார்.

ஆனால், மேற்கண்ட விவகாரங்களில் சமரச பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் முன்வரவில்லை என ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதலாம் ஆண்டு நாளை ஆளும் கட்சியினர் வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில் அமெரிக்க அரசு அலுவலகங்கள் கதவடைப்பு செய்யப்படும் நிலை உருவாகியுள்ளதால், டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார்.

மேலும், அமெரிக்க நெட்டிசன்கள் டிரம்ப் மற்றும் குடியரசு கட்சி தலைவர்களை இணையத்தில் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

கடந்த 2013-ம் ஆண்டிலும் இதுபோல் ஒருமுறை நடைபெற்றதும், இதனால் 16 நாட்கள் அரசு அலுவலகங்களின் செயல்பாடு முடங்கியது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News