செய்திகள்

அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது: பாக். வெளியுறவு துறை

Published On 2018-01-12 22:55 GMT   |   Update On 2018-01-12 22:55 GMT
அமெரிக்க நாட்டுடனான தகவல் பரிமாற்ற சேவைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

அமெரிக்காவிடம் இருந்து தீவிரவாத ஒழிப்புக்காக பெற்ற நிதியுதவியை பாகிஸ்தான் முறையாக செலவழிக்கவில்லை என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ராணுவ நிதி உதவி உள்பட அனைத்து நிதி உதவிகளையும் நிறுத்தி வைத்து டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பு, உளவு தகவல்கள் பகிர்வு ஆகியவற்றை நிறுத்தி வைக்கப் போகிறோம் என பாகிஸ்தான் அறிவித்தது. இது இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்தது.

இந்நிலையில், அமெரிக்காவுடனான தகவல் பரிமாற்ற சேவைகள் தொடரும் என பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், தகவல் தொடர்பு வழிகளை அமெரிக்காவும், பாகிஸ்தானும் மூடி விடவில்லை. தொடர்ந்து திறந்து தான் வைத்துள்ளன. ஒத்த ஆர்வம் உடைய பல்வேறு பிரச்சனைகளில், இருதரப்பும் பரஸ்பரம் தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு தான் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News