செய்திகள்

சவூதி அரேபியாவில் மீண்டும் வணிக ரீதியிலான சினிமாவை கொண்டு வர திட்டம்

Published On 2017-12-11 10:51 GMT   |   Update On 2017-12-11 11:27 GMT
சவூதி அரேபியாவில் 37 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வணிக ரீதியிலான சினிமா திரைப்படங்கள் அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் அனுமதிக்கப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெட்டா:

பழமைவாத சட்ட திட்டங்களை கொண்ட சவூதி அரேபியா, தற்போது இளவசரர் முகம்மது பின் சல்மானின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் மெல்ல, மெல்ல நவீன கலாச்சாரங்களையும், பெண்களுக்கான உரிமைகளையும் அனுமதித்து வருகிறது. மைதானத்திற்கு சென்று விளையாட்டுகளை பார்க்கும் உரிமை, கார் ஓட்டுவதற்கான உரிமை என பெண்களுகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 37 ஆண்டுகளாக வணிக ரீதியிலான சினிமா திரைப்படங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சினிமாவை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அந்நாட்டு தகவல் மற்றும் கலாச்சார துறை தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் சினிமா தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இளவரசர் முகம்மது பின் சல்மானின் 2030 விஷன் திட்டத்தின் கீழ் பல அதிரடி மாற்றங்கள் அரசு நிர்வாகத்தில் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 1970-ம் ஆண்டு வரை சவூதியில் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. ஆனால், ஒழுக்க நெறியை சினிமா கெடுத்து விடும் என மத அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சினிமாவுக்கு மூடு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News