செய்திகள்

ஈரான் நாட்டின் பெருந்தலைவரை ‘புதிய ஹிட்லர்’ என விமர்சித்த சவூதி பட்டத்து இளவரசர்

Published On 2017-11-24 09:32 GMT   |   Update On 2017-11-24 10:14 GMT
ஈரான் நாட்டின் பெருந்தலைவர் அயோத்துல்லா கம்மேனியை ‘மத்திய கிழக்கு நாடுகளின் புதிய ஹிட்லர்’ என சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது சல்மான் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெட்டா:

ஈரான் நாட்டின் பெருந்தலைவராக கடந்த 1989-ம் ஆண்டு முதல் இருந்து வரும் அயோத்துல்லா கம்மேனி வளைகுடா நாடுகளில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். அணு ஆயுத சோதனை உள்பட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் எதிர்ப்பை சட்டை செய்யாமல், மத்திய கிழக்கு நாடுகளில் தனி செல்வாக்குடன் செயல்பட்டு வருகிறார்.

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக சமீபத்தில் பொறுப்பேற்ற முகம்மது பின் சல்மான், தொடர்ச்சியான சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரது பல நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டுகளை அள்ளிவீசி வருகின்றது.

ஈரான் பெருந்தலைவர் அயோத்துல்லா கம்மேனி

ஹிஸ்புல்லா இயக்கத்தின் பின்னணியில் ஈரான் இருந்து கொண்டு தனது உயிருக்கு குறி வைப்பதாக லெபனான் பிரதமர் சாத் ஹரிரி சமீபத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறிய ஹரிரி, சவூதியில் தஞ்சமடைந்து பின்னர் இரு வாரங்களுக்கு பின்னர் சொந்த நாடு திரும்பினார்.

இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஈரான் முக்கிய காரணமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஈரான் பெருந்தலைவரை புதிய ஹிட்லர் எனவும் அவர் விமர்சித்தார்.

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப்போரில் ஈரான் ஆதரவு பெற்ற ஹைதி இயக்கத்தை எதிர்த்து சவூதி தலைமையிலான கூட்டுப்படை கடும் சண்டையிட்டு வருகிறது. இரண்டரை ஆண்டுகள் நடந்து வரும் இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான வான் தாக்குதல்களை சவூதி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News