செய்திகள்

வெளிநாட்டு மாணவர்கள் மூலம் 2.55 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அமெரிக்கா

Published On 2017-11-14 00:49 GMT   |   Update On 2017-11-14 00:49 GMT
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க சென்று படிக்கும் மாணவர்கள் மூலம் கடந்த கல்வியாண்டில் சுமார் 2 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளகாக அந்நாட்டு சர்வதேச கல்வி மையம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் சர்வதேச கல்வி மையம் 2016-17 -ம் கல்வியாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் தற்போது 10.8 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில், 3.50 லட்சம் மாணவர்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு சீன மாணவர்களின் எண்ணிக்கை 6.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதிக மாணவர்கள் பட்டியலில் இந்தியா, 1.86 லட்சம் பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இது 12.3 சதவீதம் அதிகமாகும். மொத்த வெளிநாட்டு மாணவர்களில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 17.3 சதவீதமாகும். இந்திய மாணவர்களில் 56.3 சதவீதம் பேர் பட்டப் படிப்பை படிப்பதற்காகவே அமெரிக்கா வருகின்றனர்.

வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கடந்த நிதியாண்டில் 2 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் அமெரிக்க மாணவர்கள், பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை அதிகம் விரும்புகின்றனர். இந்தப் பட்டியலில், இந்தியா 15-வது இடத்தில் உள்ளது. கடந்த கல்வியாண்டில், இந்தியாவில் படிக்கும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை 4,438-ல் இருந்து 4,181 ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News