செய்திகள்

எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியல்: இந்தியா 30 இடங்கள் முன்னேற்றம்

Published On 2017-10-31 19:30 GMT   |   Update On 2017-10-31 19:30 GMT
எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளில் இந்தியா வியக்கத்தக்க அளவில் 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளில் இந்தியா வியக்கத்தக்க அளவில் 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி சார்பில் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் இந்த ஆண்டும் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலக வங்கி வெளியிட்டுள்ள 2018-ம் ஆண்டுக்கான தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா அபார முன்னேற்றம் கண்டுள்ளது.



இந்த ஆண்டு இந்தியா வியக்கத்தக்க அளவில் 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு வரிவிதிப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வந்ததே முக்கியமான காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தையும், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும் டென்மார்க் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 147-வது இடத்தையும், சோமாலியா கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலுக்காக மொத்தம் 190 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்தியா போல் வேறு எந்த நாடும்
முன்னேற்றம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நொடிந்து போகும் நிறுவனங்களை மீட்பதில் 136-வது இடத்தில் இருந்து 33 இடங்கள் முன்னேறி 103-வது இடத்துக்கு இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் மிக வேகமாக தொழில்துறை வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் மும்பை, டெல்லி ஆகியவை முதல் 10 நகரங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட பட்டியலில் இந்தியா 142-வது இடத்தை பிடித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக 130-வது இடத்தை இந்தியா பெற்றிருந்தது.

இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், முதல் 50 இடத்துக்குள் இடம் பிடிப்பது பிரதமர் மோடியின் கனவு. நாம் இப்போது 100-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். விரைவில் 50-ம் இடத்துக்குள் இடம்பிடித்து விடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் அனைத்து பிரிவுகளிலும் கொண்டு வந்த கொள்கை அளவிலான மாற்றத்திற்கு கிடைத்த வெற்றி இதுவாகும். எளிதாக தொழில் தொடங்கும் சூழல், நடுத்தர மற்றும் சிறிய குறுரகத் தொழில்கள் செழித்தோங்க உதவும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News