செய்திகள்

மால்டா: பனாமா கேட் ஊழலை அம்பலப்படுத்திய பெண் நிருபர் குண்டு வீசி கொலை

Published On 2017-10-17 09:11 GMT   |   Update On 2017-10-17 09:11 GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சம்பந்தப்பட்ட பனாமா கேட் ஊழலை வெளிப்படுத்திய பெண் நிரூபர் மால்டாவில் குண்டு வீசி கொல்லப்பட்டார்.
மால்டா:

பனாமா நாட்டில் உள்ள புகழ் பெற்ற ‘மொசாக் பொன்சேகா’ சட்ட நிறுவனத்தின் உதவியுடன் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர்.

இது தொடர்பான ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அது ‘பனாமா கேட் ஊழல்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிக்கினர். அவர்களில் நவாஸ் செரீப் பிரதமர் பதவியை இழந்தார். தற்போது அவரும், குடும்பத்தினரும் ஊழல் வழக்கு விசாரணையில் சிக்கி தவிக்கின்றனர்.

‘பனாமா கேட்’ ஊழலை மால்டா நாட்டை சேர்ந்த பெண் நிருபர் டேப்னி கருவானா கலிஜியா உலகுக்கு அம்பலப்படுத்தினார். அதை தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.



இந்த நிலையில், நேற்று அவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மால்டாவில் உள்ள பிட்னிஜா கிராமத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கார் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்கினர். அதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே போலீசில் புகார் செய்திருந்தார். மேலும் தனக்கு வந்த மிரட்டல் கடிதத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்திருந்தார்.

அரசியல்வாதிகளின் ஊழல் குறித்து தனது வலைப் பக்கத்தில் விலாவாரியாக எழுதி வந்தார். பனாமா கேட் ஊழலில் சிக்கியுள்ள மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் பதவி தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அவர் பெண் நிருபர் கலிஜியா படுகொலைக்கு டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். இது மிகவும் கொடூரமானது என கூறியுள்ளார்.
Tags:    

Similar News