செய்திகள்

சோமாலியா தாக்குதலில் பலி 276 ஆக உயர்வு: மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு

Published On 2017-10-16 06:54 GMT   |   Update On 2017-10-16 06:54 GMT
சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
மொகடிசு:

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசுவில் நேற்று 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. மொகாடிசுவில் சபாரி என்ற ஓட்டல் உள்ளது. இது மக்கள் நெரிசல் மிகுந்த பகுதி. இது வெளியுறவு துறை அமைச்சகம் அருகே உள்ளது.

நேற்று வெடி குண்டு நிரப்பிய லாரியை அந்த ஓட்டல் மீது மோதி தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர். அதில் ஓட்டலில் பெரும் பகுதியும், அதன் அருகே இருந்த பல கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின.

ரோட்டில் நிறுத்தியிருந்த கார்கள், லாரிகள், வேன்கள் எரிந்தன. குண்டு வெடித்ததால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்தது. பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர். விபத்தில் ஏராளமானோர் கை, கால்களை இழந்தனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ரத்தம் தோய்ந்த செருப்புகளும், ஷூக்களும் சிதறி கிடந்தன. நூற்றுக் கணக்கானவர்களை காணவில்லை என உறவினர்கள் புகார் செய்தனர். அவர்களை தேடி ஆஸ்பத்திரிகளில் அலை மோதினர்.

இந்த பயங்கர வெடி குண்டு தாக்குதலில் நேற்றைய நிலவரப்படி 85 பேர் வரை இறந்திருப்பதாகவும், ஏராளமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இவர்களில் மேலும் பலர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை இன்று 276 ஆக உயர்ந்துள்ளது. 300 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. அல்கொய்தா ஆதரவுடன் இயங்கும் அல் ‌ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. சோமாலியாவில் 2007-ம் ஆண்டு முதல் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடங்கியது.

அவர்கள் நடத்திய தாக்குதலில் இதுவே மிக மோசமானதாக கருதப்படுகிறது. தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சோமாலியாவில் 3 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அதிபர் முகமது அப்துல்லாகி முகமத் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு ரத்த தானம் வழங்கி உதவுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மி‌ஷன், துருக்கி, இங்கிலாந்து நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சகங்கள் மற்றும் ஆப்பிரிக்க யூனியன் கமி‌ஷன் தலைவர் மவுசா பாகி மகமழத், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் ஆகியோர் கண்டித்துள்ளனர்.
Tags:    

Similar News