செய்திகள்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் துணை ராணுவ வீரர்கள் 4 பேர் பலி

Published On 2017-10-15 20:16 GMT   |   Update On 2017-10-15 20:16 GMT
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே துணை ராணுவ வீரர்களை குறிவைத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பை பயங்கரவாதிகள் அரங்கேற்றினர். இதில் சிக்கி கேப்டன் ஹஸ்னன் மற்றும் 3 சிப்பாய்கள் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே குர்ரம் ஏஜென்சி பகுதியில் நேற்று துணை ராணுவ வீரர்களை குறிவைத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பை பயங்கரவாதிகள் அரங்கேற்றினர். இதில் சிக்கி கேப்டன் ஹஸ்னன் மற்றும் 3 சிப்பாய்கள் பலியாகினர்.

இவர்கள் 4 பேரும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தலீபான்களுடன் இணைந்து செயல்படும் ஹக்கானி வலைச்சமூகத்தினரால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த கனடா நாட்டின் ஜோசுவா பாய்லே, அவரது அமெரிக்க மனைவி கெயித்லான், அவர்களது குழந்தைகள் மீட்கப்பட்டதில் முக்கிய பங்காற்றியவர்கள் என்று பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த குண்டுவெடிப்புக்கு முன்னதாக அதே பகுதியில் 3 சிறிய குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த குண்டுவெடிப்புகளுக்கு பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்புகளை தொடர்ந்து குர்ரம் ஏஜென்சி பகுதியில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News